15/01/2026
சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில், கள்ளத்தனமாக கடத்தப்பட்ட ஐந்து லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஐந்து லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் அல்ல, ஐந்து லட்சம் மாத்திரைகள்!
இப்போதெல்லாம் இப்படிப்பட்ட செய்திகளை நாம் எளிதில் கடந்து விடுகிறோம். அதற்குப் பெரிதாக முக்கியத்துவம் தருவதில்லை. ஏனெனில், 'போதை' என்பது இப்போது சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது.
ஆனால் இதன் பின்னால் இருக்கும் ஓர் இருண்ட உலகைப் பற்றி, நம்மில் பலருக்குத் தெரிவதே இல்லை. நம் குடும்பத்தில் ஒருவர் போதைக்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் போது தான் இப்படி ஒன்று இருப்பது பற்றியே தெரியவரும்.
போதை மாத்திரைகளில் பல வகைகள் உண்டு. அதில், இளைஞர்கள் மத்தியில் சமீப காலமாக அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒரு மாத்திரை தான் Tydol.
இந்த Tydol மாத்திரையின் வேதியியல் பெயர் Tapentadol. இது, வலி மற்றும் மயக்கம் தொடர்பான சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தும் 'ஓப்பியாய்டு' வகையைச் சேர்ந்தது.
இந்த ஓப்பியாய்டு மாத்திரைகள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை வேறொரு பதிவில் எழுதுகிறேன். இப்போது Tydol பற்றி மட்டும் பார்ப்போம்.
*
கடந்த ஐந்து ஆண்டுகளில், இளைஞர்கள் மத்தியில் Tydol போதை மாத்திரை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.
இம்மாத்திரை, 50 அல்லது 100 மில்லிகிராம் அளவில் கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் மருந்துச்சீட்டு இருந்தால் மட்டுமே இம்மாத்திரையை வாங்க முடியும்.
எனக்குத் தெரிந்து எந்த மருத்துவரும் இப்போது இம்மாத்திரையை சிகிச்சைக்காகப் பயன்படுத்துவது இல்லை. இதே வகையைச் சேர்ந்த இன்னொரு மாத்திரையான Tramadol ஐ மட்டும் ஒருசிலர் தீராத உடல் வலிக்காக பயன்படுத்துகிறார்கள். எனவே Tydol இப்போது எந்த மருந்தகத்திலும் கிடைப்பதில்லை.
எனவே இம்மாத்திரையை இவர்கள் கள்ளத்தனமாக வாங்குகிறார்கள். இதை வாங்கும் முறையே வியப்பாக இருக்கிறது. பெரும்பாலும் தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களிலிருந்து தான் இவர்கள் இம்மாத்திரையை வாங்குகிறார்கள்.
என்னிடம் சிகிச்சை பெற்ற ஒருவர் சொன்ன விஷயம் இது:
'பெரும்பாலும் இந்த மாத்திரையை மும்பை, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து தான் நாங்கள் வாங்குகிறோம். தமிழ் நாட்டில் இம்மாத்திரை இப்போது அதிகம் கிடைப்பதில்லை. எங்களுக்குத் தனி நெட்வொர்க் இருக்கிறது. ட்ரெயின் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழ் நாட்டுக்கு இம்மாத்திரைகளைக் கடத்தி கொண்டு வருவோம்...'
இதை வாங்க இவர்களிடத்தில் தனி டெலிகிராம் குரூப் உள்ளது. அட்ரஸை அந்த குரூப்பில் அனுப்பிவிட்டு, அட்மினுக்கு தொகையை போன்பேவில் அனுப்பினால் போதும் மாத்திரை வீடு தேடி வரும்.
ஒரு அட்டையில் மொத்தம் பத்து மாத்திரைகள் இருக்கும். மார்க்கெட்டில் இதன் நிர்ணயிக்கப்பட்ட விலை, வெறும் முப்பது ரூபாய் தான். அதாவது ஒரு மாத்திரையின் விலை முப்பது ரூபாய். ஒரு அட்டையின் விலை முன்னூறு.
ஆனால் கள்ளத்தனமாக வாங்குபவர்கள், ஒரு அட்டைக்காக செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா? ஐந்தாயிரம் ரூபாய். அதாவது, ஒரு மாத்திரையின் விலை ஐநூறு ரூபாய். முப்பது ரூபாய் மதிப்புள்ள ஒரு மாத்திரையை ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்.
நல்ல பொருளாதாரப் பிண்ணனியில் இருக்கும் மாணவர்களுக்கு இதில் சிக்கல் இல்லை. ஆனால், தாய் தந்தை கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நிலை? சொல்லப்போனால் இவர்கள் தான் இந்த போதை மருந்துக்கு அதிகளவில் அடிமை ஆகின்றனர்.
அப்போது தான் அவர்களுக்குள் இருக்கும் திருட்டு புத்தி வெளியே வருகிறது. சொந்த வீட்டில் பணத்தைத் திருட ஆரம்பிப்பார்கள். வீட்டில் இருக்கும் தங்கம் வெள்ளி போன்ற பொருட்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போகும். பிறகு அடுத்தவன் வீட்டில் கை வைப்பர். இதன் உச்ச நிலை தான் வழிப்பறியில் ஈடுபடுவது, பணத்துக்காக ஒருவனைக் கொல்வது.
இவர்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் முறையே பலருக்கு அதிர்ச்சியைத் தரலாம்.
ஒரு அட்டையில் இருக்கும் பத்து மாத்திரைகளில், இரண்டு அல்லது மூன்று என அவர்களுடைய போதைக்கு ஏற்றவாறு எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர்.
அம்மாத்திரைகளை ஒன்றாக நசுக்கி பொடியாக்குவர். அந்தப் பொடியைத் தண்ணீருடன் கலக்க வேண்டும். எனவே 'நார்மல் சலைன்' எனும் உப்பு நீரில் அதை கலந்து கொள்வர். நார்மல் சலைன் என்பது வேறொன்றும் இல்லை, மருத்துவமனையில் பயன்படுத்தும் குளுகோஸ் பாட்டில் தான்.
கலந்த அந்த போதை திரவத்தை இப்போது வடிகட்ட வேண்டும். அதை வடிகட்ட, சிகரெட்டின் பின்பகுதியில் உள்ள மெலிதான பேப்பரைப் பயன்படுத்துவர். வடிகட்டிய திரவம் இப்போது உடலில் உட்கொள்ளத் தயாராகி விடும்.
அதை சிரெஞ்சினுள் ஊற்றி, தன்னுடைய இடது கையில் (வலது கைப்பழக்கம் உடையவராக இருந்தால்) இருக்கும் நரம்புக்குள் செலுத்திக் கொள்வர்.
இப்படி ஊசி போடத் தொடங்கும் போது, முதலில் குழுவாகத் தான் செயல்படுவர். அதாவது ஒரு போதை அடிமை, இன்னொருவனுக்கு ஊசி போட்டு விடுவான். ஆனால் நாளடைவில், தங்களுக்குத் தாங்களே ஊசி போட்டுக் கொள்ள அவர்கள் பழகி விடுவர்.
*
Tydol போன்ற போதை ஊசிக்கு அடிமையானவர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
1. கையில் ஊசி குத்தி குத்தி அந்த இடமே புண் ஆகிவிடும். 'கருப்பு பொட்டு' போன்று ஆங்காங்கே முத்துக்கள் முளைத்திருக்கும்.
2. அந்தக் கருப்பு புள்ளிகளை மறைக்க, எப்போதும் இவர்கள் முழுக்கைச் சட்டையோடு வலம் வருவார்கள். வீட்டில் இருக்கும் போது கூட!
3. அந்த இடத்தை மறைக்க டேட்டூ குத்திக் கொள்வார்கள்.
4. பொதுவெளியில் யாரிடமாவது பேசும்போது, தங்களுடையக் கைகளை மறைக்க முற்படுவர்.
ஆக பதின்ம வயதில் இருக்கும் ஒரு இளைஞர், எந்நேரமும் முழுக்கை சட்டை அணிந்து, டேட்டூ குத்திக் கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்து, சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் விலகி நின்று, தேவையில்லாமல் அதிகம் செலவு செய்பவராக இருந்தால் அவர் போதை ஊசிக்கு முன்பே அடிமையானவர் என்பதைப் புரிந்து கொள்க!
*
சில நாட்களுக்கு முன்பு இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் என்னைப் பார்க்க வந்தார். அவருடைய தந்தையும் உடன் இருந்தார்.
மாநிறம். ஐந்தடி உயரம். சுருட்டை முடி. கண்கள் சோர்வாக இருந்தன. வாய்ப்பகுதி வரண்டு போய் இருந்தது. முழு கைச் சட்டை. இரண்டு கைகளிலும் ஏதேதோ உருவங்கள் பதியப்பட்ட டேட்டூ.
பார்த்த உடனே தெரிந்து விட்டது, இவர் போதை ஊசிக்கு அடிமையானவர் என்பது.
'என்ன பிரச்சினை' என்றேன். 'தூக்கம் வரவில்லை' என்றார். 'ஏன் வரவில்லை' என்றேன். 'தெரியவில்லை' என்றதும், அருகில் இருந்த அவருடைய தந்தை, அந்த இளைஞனின் கன்னத்தில் பளீர்ர் என ஒரு அப்பு அப்பி, 'ஏன் தூக்கம் வரலனு தெரியாதா உனக்கு...பொறுக்கி நாய...என்ன பிரச்சினைனு விரிவான சொல்லுடா டாக்டர் கிட்ட...'என்றார்.
சற்று நேரத்தில், தான் Tydol, Nitrazepam போன்ற போதை மருந்துகளை பயன்படுத்துவதாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். அதை நான் முன்பே எதிர்பார்த்திருந்ததால், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று மனதிற்குள் De-addiction Treatment பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.
ஆனால் அடுத்து அவர் சொன்னதை அப்போது நான் எதிர்பார்க்கவில்லை.
அவர் சொல்லிய விஷயம் இது தான்:
ஒரு வாரமாக காய்ச்சல் என்று, பொது மருத்துவர் ஒருவரை பார்த்திருக்கிறார். இப்படி ஊசி போடும் பழக்கம் இருப்பது தெரிந்து, அம்மருத்துவரும் அவரிடம் ரத்த பரிசோதனைகள் எடுத்துக் கொண்டு வரும்படி எழுதி கொடுத்திருக்கிறார். அதில் எச்.ஐ.வி எய்ட்ஸ் பரிசோதனையும் ஒன்று. ஆம்! பரிசோதனையில் அந்த இளைஞருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வெறும் இருபது வயதில் எய்ட்ஸ் நோய்!
ஐந்து நிமிட போதை சுகத்துக்கு ஆசைப்பட்ட அவர், இனி காலம் முழுவதும் எய்ட்ஸ் மருந்தை சாப்பிட வேண்டும்.
கூலி வேலை செய்து, சிறுக சிறுக பணம் சேர்த்து, அப்பணத்தைக் கொண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மகனை சேர்த்து விட்ட... இப்போது அவன் அருகே அமர்ந்திருக்கும் அந்த தந்தையின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
போதை ஊசி போட்டுக் கொள்வதில் ஆபத்தான நிலையே இது தான். அது 'நீடில் ஷேரிங்'. அதாவது ஒருவன் பயன்படுத்திய சிரெஞ்சை இன்னொருவன் பயன்படுத்துவது. அந்த முதலாமவனுக்கு எய்ட்ஸ் போன்ற வியாதி இருந்தால் அது அப்படியே இவனுக்கும் பரவும். இப்படி சங்கிலித் தொடராக அடுத்தடுத்து பயன்படுத்துபவனுக்கு எய்ட்ஸ் நோய் எளிதில் பரவும்.
தனக்கு எய்ட்ஸ் வந்துள்ளது எனத் தெரிந்த பிறகு அந்த இளைஞர் Tydol மாத்திரை போடுவதை விட்டு விட்டாரா?
அது தான் இல்லை. அடுத்த நாளே அதிக அளவிலான மாத்திரைகளை உடலினுள் செலுத்திக் கொண்டார்.
அவருக்கு அட்மிஷன் தேவைப்பட்டது. உரிய சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.
நண்பர்களே!
இது தான் போதை. போதை ஒரு புதைக்குழி. அதில் விழுந்துவிட்டால் மீண்டு வருவது சாத்தியம் இல்லை. என்னதான் இதற்கு பல சிகிச்சைகள் இருந்தாலும் ஒரு சிலரால் மட்டுமே அதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும். அதற்குப் பெரிய அளவில் தன்னம்பிக்கையும் குடும்ப நபர் ஒத்துழைப்பும் தேவை.
இப்படி போதை ஊசியை போட்டுக் கொள்பவர்கள், எடுத்த உடனேயே இதனை பயன்படுத்த மாட்டார்கள். இதற்கு முன்பு சிகரெட், கூல் லிப், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களைப் பயன்படுத்தி, அவையெல்லாம் சலித்துப் போன பின்பு தான், இன்னும் அதிக போதை வேண்டி இதுபோன்ற ஊசிகளைப் போட ஆரம்பிப்பார்கள்.
கூல் லிப் போன்ற போதை வஸ்துக்களை பத்து வயதிலிருந்தே பள்ளி மாணவர்கள் உபயோகிக்கின்றனர். இந்தக் கட்டத்திலேயே இவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவது தான் புத்திசாலித்தனம். இல்லையெனில் இதே நிலை நாளை நம் பிள்ளைகளுக்கும் வரலாம்.
-சு. சரத்குமார், மனநல மருத்துவர், கோவை.
படம் -கூகுள் குரோம்_ல்
எடுத்தது.