13/09/2025
'நாம் குருநாதரைத் தேடிச் செல்லவேண்டியதில்லை, சரியான நேரத்தில், அவரே நம்மைத் தேடி வருவார், வழிநடத்துவார்' என்கிறது ஆன்மீகம். அறிஞர் அண்ணாவின் வாழ்வில் அவ்வாறே நடந்தது. அதுகுறித்து விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்தப் பதிவு.
திருப்பு முனைகள் (தன்னம்பிக்கைத் தொடர்)
10. குரு
இந்தப் பதிவை ஆடியோ வடிவில் Youtube இல் கேட்க விரும்பினால் Comment பகுதிக்குச் செல்லுங்கள்.
1935: திருப்பூர் வாலிபர் மாநாடு.
பெயருக்குத் தகுந்ததுபோல், அந்த அரங்கம் முழுவதும் இளைஞர்கள் நிறைந்திருந்தார்கள். ஒவ்வொரு முகத்திலும் குரலிலும் புதுப்புதுக் கனவுகள், சிந்தனைகள், நம்பிக்கைகள்.
இந்தியா இன்னும் சுதந்தரம் அடைந்திருக்காத நேரம் அது. வெள்ளைக்காரனின் அடக்குமுறை, உள்ளூர் ஜாதி, மதம் சார்ந்த கொடுமைகள், பெண்களை ஒதுக்கிவைக்கும் மனப்போக்கு, அந்நியமோகம், ஹிந்தி ஆதிக்கம் என்று எத்தனையோ விஷயங்கள் நம் தமிழ்ச் சமூகத்தைச் சுரண்டிக்கொண்டிருந்தன.
ஒரு தவளையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்தால், அது உடனே துள்ளாது, துடிக்காது. காரணம், தண்ணீரின் வெதுவெது வெப்பநிலை அதற்கு இதமாக இருக்கும், அதை மீறி வெளியேறவேண்டும் என்று தோன்றாமல் அங்கேயே ஜாலியாக நீச்சலடித்துக்கொண்டிருக்கும்.
ஆனால், சிறிது நேரம் கழித்து, அதே தண்ணீர், கொதிக்கத் தொடங்கிவிடும், இப்போது தவளைக்கு உடம்பு சுடும், வலிக்கும், ஆனால் அதால் குதித்து வெளியேறமுடியாது, அப்படியே சாகவேண்டியதுதான்.
அதேபோல்தான், அன்றைய தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும், இப்படிப்பட்ட சமூகப் பிரச்னைகளைப் பெரும்பாலானோர் கண்டுகொள்ளவில்லை, 'என்ன பிரச்னை? எல்லாம் நன்றாகதானே இருக்கிறது?' என்றுதான் பேசினார்கள், நாளைக்கு அது நம்மையும் பாதிக்கலாம் என்பது அப்போது அவர்களுக்குப் புரியவில்லை.
இதுபோன்ற விஷயங்களை எதிர்த்துப் போராடுவதற்குப் பெரியவர்களே தயங்கும் சூழ்நிலையில், அந்த அரங்கில் குழுமியிருந்த இளைஞர்கள் மிகவும் வித்தியாசமானவர்களாகத் தெரிந்தார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நாங்கள் தைரியமாக எதிர்ப்போம் என்கிற அவர்களுடைய அணுகுமுறை, தீபோல் பரவிக்கொண்டிருந்தது.
அந்தத் திருப்பூர் வாலிபர் மாநாட்டின் சிறப்பு அம்சம், இளைஞர்களின் மேடைப் பேச்சு. அந்த வயதுக்கே உரிய துள்ளல், துடிப்புடன், அவர்களுடைய மொழியில் சமூக முன்னேற்றம், மாற்றம் பற்றிய கருத்துகள் சொல்லப்படும்போது, அது இன்னும் பலரைக் கவர்ந்து இழுத்தது, கை தட்டச் செய்தது.
மாநாட்டின் ஒரு பகுதியாக, அந்த இளைஞர் மேடையேறினார். குள்ளமான உருவம், சுமார் இருபத்தைந்து வயது இருக்கலாம்.
அவருடைய உருவமோ, உடை அலங்காரமோ விசேஷமாக இல்லை. மக்களை ஈர்க்கும்படியான எந்தக் கவர்ச்சியும் அவரிடம் இல்லை. அவரைச் சாதாரணமாகப் பார்க்கிறவர்கள், 'இவர் என்ன பெரிதாகப் பேசிவிடப்போகிறார்?' என்றுதான் நினைப்பார்கள்.
ஆனால், அவர் மேடையேறித் தன்னுடைய பேச்சைத் தொடங்கிய மறுகணம், நிலைமை மாறிவிட்டது. அந்த கணீர் குரலை முதன்முறை கேட்டதுமே, இந்த இளைஞரிடம் ஏதோ விசேஷம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் புரிந்துவிட்டது.
தான் பேசத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைப்பிலிருந்து அவர் இம்மியளவும் பிசகவில்லை. கேட்கச் சுகமான அடுக்குமொழிகளின் துணையோடு, எல்லோருக்கும் புரியும்படியான மொழியில், ஆதாரப்பூர்வமான வாதங்களை நேர்த்தியாகப் பட்டியலிட்டு அவர் பேசப்பேச, அதுவரை முற்போக்குச் சிந்தனை இல்லாதவர்களுக்கும்கூட நரம்பு துடித்தது.
சில நிமிடங்களுக்குள், அங்கிருந்த எல்லோரையும் கட்டிப்போட்டுவிட்டார் அந்த இளைஞர். அவர் பேசி முடித்தபோது, அரங்கில் எழுந்த கைதட்டல் ஒலி நெடுநேரத்துக்கு அடங்கவில்லை.
தன் பேச்சால், ஒரு சின்னப் புயலையே உருவாக்கிவிட்ட அந்த இளைஞருக்கு, அங்கே ஒரு சின்ன ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. அந்த ரசிகர்களில் முக்கியமான ஒருவர், மாநாட்டுக்கு வந்திருந்த பிரபலம், ஈ.வெ. ராமசாமி பெரியார்!
ஈரோட்டைச் சேர்ந்த தந்தை பெரியார், அன்றும், இன்றும் தமிழக அரசியலில் ஓர் உன்னத ஆளுமையாகத் திகழ்கிறவர். அப்போது அவர், திராவிடர்கள், முக்கியமாகத் தமிழர்கள் சுயமரியாதை உணர்வு பெறவேண்டும் என்பதற்காகவே ஒரு தனி இயக்கத்தைத் தொடங்கி நடத்திக்கொண்டிருந்தார்.
இந்தச் சமூகம் திருந்த வேண்டுமென்றால், இன்றைய தலைமுறைமட்டும் மாறினால் போதாது, நாளைய தலைமுறையினரையும் ஈர்க்கவேண்டும், அவர்களிடையே ஒரு சிந்தனை மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்று விரும்பினார் தந்தை பெரியார்.
அதனால்தான், பக்கத்து நகரமான ஈரோட்டைச் சேர்ந்த அவர், இந்தத் திருப்பூர் வாலிபர் மாநாட்டுக்கு ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டார். இங்கிருக்கும் இளைஞர்களின் புதுச் சிந்தனையும் செயல்வேகமும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
குறிப்பாக, இப்போது மேடையேறிப் பேசிய அந்த இளைஞர், பெரியாரை மொத்தமாக ஈர்த்துவிட்டார். அவருடைய பேச்சின் அழகு, சிந்தனையின் தெளிவைப் பார்க்கிறபோது, இவரைப்போன்ற இளைஞர்களிடம்தான் தமிழகத்தின் எதிர்காலம் இருக்கவேண்டும் என்று உற்சாகமாக நினைத்தார் பெரியார்.
அன்றைய கூட்டத்தின் முடிவில், பெரியாரும் அந்த இளைஞரும் சந்தித்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. இந்தச் சந்திப்பு, அவர்கள் இருவருக்குமே மிகப் பெரிய சந்தோஷம்.
பெரியாருக்கு, தன்னைப்போலவே சிந்திக்கக்கூடிய, வேகமும், விவேகமும் நிறைந்த ஒருவரைச் சந்திக்கும் மகிழ்ச்சி. அவருக்கு எதிரே நின்றிருந்த அந்த இளைஞருக்கோ, தந்தை பெரியாரை நேரில் சந்தித்துப் பேசுகிற பரவசம்!
ஏற்கெனவே, தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள் பலவற்றை வாசித்து, அதனால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தார் அந்த இளைஞர். ஆகவே, மிகுந்த பணிவு, மரியாதையுடன், 'ஐயா, என் பெயர் சி. என். அண்ணாத்துரை' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
'என்ன செய்கிறாய் அண்ணாத்துரை?' அன்போடு விசாரித்தார் பெரியார்.
'படிக்கிறேன் ஐயா' என்றார் அண்ணாத்துரை. அப்போது அவர் பி.ஏ. ஹானர்ஸ் பரீட்சை எழுதிவிட்டு, தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
'அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?' ஆர்வமாகக் கேட்டார் பெரியார், 'எங்காவது உத்தியோகம் பார்க்கப்போகிறாயா?'
'இல்லை' என்று உடனடியாகவும், உறுதியோடும் சொன்னார் அண்ணாத்துரை, 'எனக்கு வேலை பார்க்கும் விருப்பம் இல்லை. நான் பொதுவாழ்வில் ஈடுபட விரும்புகிறேன்'
அவர் இப்படிச் சொன்னதும், பெரியாரின் உற்சாகம் இருமடங்காகிவிட்டது. இளைஞர்கள் பொதுவாழ்க்கைக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்த அவர், இப்போது இந்த அண்ணாத்துரையைத் தனது முதன்மைச் சீடராக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்டார்.
அன்றுமுதல், அரசியல், சமூகப் பணிகளில்மட்டுமின்றி, தனிப்பட்டமுறையிலும் அண்ணாத்துரை தந்தை பெரியாரின் மகன்போல மாறிவிட்டார். பெரியாருடன் பயணம் செய்வது, அவருடைய பத்திரிகைகளைக் கவனித்துக்கொள்வது, கட்சி விவகாரங்களில் ஈடுபடுவது என ஓர் அழுத்தமான அரசியல் அடித்தளம் அவருக்கு அமைந்தது.
பெரியாரின் வழிநடத்துதலில், அண்ணாத்துரை தனித்துவம் நிறைந்த ஓர் அரசியல் தலைவராக உருவானார். தனது திராவிடர் கழகத்தின் பல முக்கியப் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்து மகிழ்ந்தார் தந்தை பெரியார்.
பின்னாள்களில், அண்ணாத்துரை, பெரியார் இருவருக்கும் இடையே பல சிறிய, பெரிய கருத்து வேறுபாடுகள், பிளவுகள் ஏற்பட்டன. எனினும், அவையெல்லாம் அவர்களிடையே இருந்த தந்தை மகன், குரு சீடர் உறவுகளைப் பாதிக்கவில்லை.
தனது வாழ்நாள்முழுவதும், தந்தை பெரியாரின் தொண்டராகவே வாழ்ந்த அண்ணாத்துரையை, தமிழகம் 'அறிஞர் அண்ணா' என்று அன்போடு அழைக்கிறது. 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்த அவர், அதனைப் படிப்படியாக வளர்த்து, அரசாங்கம் அமைத்தார். சிறப்பான ஆட்சி நடத்தி மக்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்தார்.
ஒருவர் எத்தனை பெரிய திறமைசாலி, உழைப்பாளியாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களும்கூட, தங்களுடைய முழுத் திறமையை வெளிப்படுத்தி ஜொலிப்பதற்கு, ஒரு சரியான ஆசிரியர், வழிகாட்டி தேவைப்படுகிறார்.
ஆனால் அதேசமயம், 'நாம் குருநாதரைத் தேடிச் செல்லவேண்டியதில்லை, சரியான நேரத்தில், அவரே நம்மைத் தேடி வருவார், வழிநடத்துவார்' என்கிறது ஆன்மீகம்.
தந்தை பெரியாருக்கோ, அறிஞர் அண்ணாவுக்கோ ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், அவர்கள் இருவரையும் இணைத்த அந்த முதல் சந்திப்பு, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில்மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழகச் சமுதாயத்துக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகத் திகழ்கிறது!
தொடரும்...
நன்றி - என். சொக்கன் மற்றும் முத்தாரம் இதழ்
திருப்பு முனைகள் - தன்னம்பிக்கை தொடரில் வெளியாகும் அனைத்து பாகங்களையும் ஒருங்கிணைந்து இணையத்தில் பார்க்க விரும்பினால் Comment பகுதிக்குச் செல்லுங்கள்.
கற்போம் கற்பிப்போம்!
சரித்திரம் தெரிந்து கொள்வோம்
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்
விழிப்புணர்வு வினீத்
நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்