06/07/2014
கத்தியின்றி இரத்தமின்றி….
நீண்ட இடைவேளைக்கு பிறகு நண்பணின் வற்புறுத்துதலுக்காக இந்த அனுபவ பகிர்வை வெளியிடுகிறேன்.
ஆங்கில மருத்துவத்தில் அறுவை சிகிச்சை அறிவுறுத்தபட்ட சில நோய் தீவிரங்களை சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்திய சில அனுபவ பகிர்வுகளை இங்கு வெளியிடுகிறேன்.
சிறுநீரக கல்லடைப்பு நோய் - அனுபவ பகிர்வு
சிறுநீரக கல்லடைப்பு நோய் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சையின்றி குணபடுத்தக்கூடிய நோய்களில் ஒன்று.
நோய் வரலாறு:
78 வயது மதிக்கத்தக்க நோயாளி 10மி.மி(1 செமீ) சிறுநீரக கல் என்னும் ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் என் மருத்துவமனைக்கு வந்தார்.எங்கள் ஊரில் அறுவை சிகிட்சை நிபுணர்,இதற்கு அறுவைதான் ஓரே தீர்வு என கூறி இருந்தார்.பொதுவாக 10மி.மி(1 செமீ) அளவுள்ள சிறுநீரக கல் அறுவை சிகிட்சைக்கு பரிந்துரைக்கப்படுவது இயல்பு. அறுவை சிகிட்சை செய்ய மனம் இல்லாது அந்த நோயாளி என்னை நாடி வந்தார்.அவருடைய தொழில் மிளகாய் மண்டியில் கணக்கர் வேலை.கடந்த 35 வருடங்களாக இந்த வேலை பார்த்து வருவதாக கூறினார்.
எண் வகை தேர்வு:
நோயாளியின் நாடி மற்றும் பிற எண் வகை தேர்வுகளும் செய்யப்பட்டன. நாடி பித்த வாதமாக கணிக்கப்பட்டது.மேலும் நீர் எரிச்சல் இருப்பதாக கூறிய அவரது நீர்குறியானது அடர் மஞ்சள் நிறத்திலும் கண்டறியப்பட்டது.மேலும் அவரது கண் மற்றும் தோலின் நிறமானது அதிகரித்த பித்த குணத்தை காட்டியது. குடிநீர் உட்கொள்ளும் அளவும் குறைவாக இருந்ததை நோயாளி கூறினார். மேலும் அவ்வப்போது சிறுநீர் செல்லும்போது இரத்தம் கலந்து போவதாகவும் கூறினார்.
சித்தமருத்துவ அறிவுரை:
• அழல் நோயாக கருத்தில் கொண்டு,அழலை குறைக்கும் வகையில் வாரம் 2 முறை கீழா நெல்லித்தைலம் கொண்டு தைல முழுக்கு அறிவுறுத்தப்பட்டது.
• இராஜ அமிர்தாதி சூரணம் + நண்டுக்க்ல் பற்பம் +வெடியுப்பு சுண்ணம் இவற்றை சிறுகண்பீளை சாற்றில் அல்லது இள நீரில் காலை மாலை உணவுக்கு பின் உண்ண அறிவுறுத்தப்பட்டது.
• காலை வெறும் வயிற்றில் நெருஞ்சில் சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 60 மிலி உண்ண அறிவுறுத்தப்பட்டது.
• மாவிலிங்கப்படடை குடி நீர் – 60 மிலி காலை மாலை உணவுக்கு பின் உண்ண அறிவுறுத்தப்பட்டது.
இது போல் 40 நாட்களுக்கு உண்ண அறிவுறுத்தப்பட்டது.27 நாளில் நோயாளியின் மகன் பதட்டத்துடன் வந்தார்.என்னவென்று விசரித்தபோது சிறு நீர்பாதை அடைத்துக்கொண்டு நீர் போக சிரமாக இருப்பதாக கூறினார். சிறுநீரக கல் உடைந்து சிறு நீர்பாதை அடைத்துக்கொண்டு சிரமம் ஏற்படுத்துவதை உணர்ந்து, நெல் அவுலை நீரில் ஊறவைத்து 2 மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்து மேற்கண்ட மருந்துகளை சாப்பிட்டு வர அறிவுறுத்தப்பட்டது.அடுத்த நாளே சிறுநீர் வழியே சிறுநீரக கல் வெளியேறியதை அறிந்த நோயாளி மகனுடன் மருத்துவமனைக்கு வந்தார்.ஸ்கேன் ரிப்போர்ட் மூலம் உறுதி செய்ய அதே அறுவை மருத்துவ நிபுணரிடம் ஸ்கேன் செய்வதற்காக நோயாளியை ரெஃபெர் பண்ணினேன்.அவரும் ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்துவிட்டு அறுவைசிகிட்சை இல்லாமல் வேறு எதுவும் சிகிச்சை எடுத்தீர்களா என நோயாளியிடம் விசாரித்து,பின் சித்த மருத்துவ சிகிச்சை அறிந்து வியப்படைந்து,என்னை சந்திக்க வருமாறு கூறி அனுப்பினார்.சித்த மருத்துவதின் மீது அதுவரை நல்ல மதிப்பு இல்லாத அவர் என்னை சந்தித்ததும் ஆச்சரியமாக வினவினார்.அன்று முதல் எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு உருவாகி இன்று வரை அறுவை சிகிட்சை விருப்பம் இல்லாத நோயாளிகளை எனக்கு ரெபர் செய்த்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.