02/12/2025
மழைகால நோய் தொற்றுகள் -1
சிக்கன் பொக்ஸ் - அறிவியல் உண்மை (The Scientific Fact)
சிக்கன் பொக்ஸ் என்பது வரிசெல்லா-ஸோஸ்டர் வைரஸ் (Varicella-Zoster Virus) என்ற கிருமியால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
• இது ஒருவரிடமிருந்து இருமல், தும்மல் மூலமாகவோ அல்லது கொப்புளங்களின் திரவத்தின் மூலமாகவோ மிக வேகமாகப் பரவும்.
• பெரும்பாலானோருக்கு இது லேசான நோயாக இருக்கும்.
• சரியான கவனிப்பு இல்லாவிட்டால், தோல் தொற்று, நிமோனியா (நுரையீரல் அழற்சி), மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம்.
அதிகளவான கொப்புளங்கள் தோன்றும் போது தோலில் அவை தழும்பாக்கி குணப்படுத்த முடியாத வடுவாகிவிடும்.
நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி antiviral மருந்தான Acyclovir எனும் மருந்தை எடுப்பதன் மூலம் நோயின் தீவிரத்தன்மையை நன்றாக கட்டுப்படுத்த முடியும்.
(தயவுசெய்து மருத்துவ ஆலோசனைக்குபின்னரே மருந்தை எடுங்கள் )
• தடுப்பூசி மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும்! (ஆனால் இந்த தடுப்பூசி இலங்கை தடுப்பூசி திட்டத்தில் இன்னும் உள்ளடக்கப்படவில்லை. இலங்கையில்மட்டுமல்ல பல வளர்ந்த நாடுகளிலும் இதை கட்டணம் செலுத்தியே பெற்று கொள்ள வேண்டும். )
⚠️ ஓர் எச்சரிக்கை உதாரணம்: மூடநம்பிக்கையின் விலை!
இரண்டு நாட்களுக்கு முன் எனது கிளினிக்கிற்கு 9 வயது சிறுமியை அழைத்து வந்தார்கள். அவளுக்கு 2 வாரங்களுக்கு முன் என்ற சிக்கன் பொக்ஸ் ஏற்பட்டிருந்தது.
• அவளின் குடும்பம், இது "கடவுளின் சாபம், குளிக்கக் கூடாது, மாத்திரை போடக் கூடாது" என்ற மூடநம்பிக்கையில், அவளை 14 நாட்களுக்குக் குளிக்க விடாமல், தனிமைச் சிறைபோல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தனர்.
• அவளுக்கு தீவிரமான அரிப்பு இருந்தும், வைத்தியரிடம் அழைத்து செல்லாமல் வைத்திருந்தார்கள். .
• சரியான அவளுக்குச் சரியான கவனிப்பு இல்லாததால், தலைப் பேன் தொல்லை (Pediculosis) கடுமையாக இருந்தது மற்றும் சொறிந்த இடங்களில் கடுமையான பாக்டீரியா தொற்று (Bacterial Infection) ஏற்பட்டிருந்தது.
• துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தோல் தொற்றின் காரணமாகச் சிறுமி நிலாவிற்குச் சிறுநீரகத்தை பாதிக்கும் கடுமையான குளோமெருலர் நெஃப்ரிடிஸ் (Acute Glomerular Nephritis) என்ற நோய் ஏற்பட்டுள்ளது.
💡 இந்தப் குழந்தையின் துயரம் நமக்குக் கற்றுக்கொடுப்பது: மூடநம்பிக்கை ஒரு உயிரையே ஆபத்தில் ஆழ்த்தும்!
👩⚕️ மருத்துவ உதவிக்கு எப்போது செல்ல வேண்டும்? (When to Seek Medical Help?)
அம்மை நோய் வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்:
1. உடலில் உள்ள கொப்புளங்கள் சிவந்து, சீழ் பிடித்து, காய்ச்சல் அதிகமாக இருந்தால்.
2. மூச்சு விடுவதில் சிரமம் அல்லது கடுமையான இருமல் இருந்தால்.
3. மயக்கம் அல்லது தலைவலி இருந்தால்.
சிறிதும் தாமதியாது வைத்தியாசலைக்கு செல்லுங்கள்.
அம்மை நோய் என்பது ஒரு நோய்தான். அது மருத்துவத்தால் குணப்படுத்தப்பட வேண்டியது. மூடநம்பிக்கைகளால் அல்ல!
இந்தத் தகவலை அனைவரிடமும் பகிர்வதன் மூலம் உயிர்களைக் காக்க உதவுங்கள்!
Dr. தனுஷா பாலேந்திரன்
Consultant Dermatologist