21/11/2025
#மஸ்டல்ஜியா எனப்படும் மார்பக வலி அல்லது அசௌகரியம்.
பெண்களில் பொதுவாக காணப்படும் பிரச்சினைகளுல் இதுவும் ஒன்றாகும்.
70 வீதமான பெண்களின் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த மார்பக வலி தோன்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக இந்த வலியானது உங்களது மார்பின் மேல்ப்பகுதியில் தோல்ப்பட்டையை அன்மித்த பகுதியில் உணரப்படுவதோடு உங்களது தோல்ப்பட்டை மற்றும் சோல்டருக்கும் பரவலாம்.
(ஹார்ட் அட்டாக் வலியும் இப்படி வரலாம் என்பதனால் அதனையும் இல்லை என உறுதி செய்ய வேண்டும்)
மார்பில் வலி இல்லாது சிலரில் ஒரு மார்பகமோ அல்லது இரண்டு மார்பகங்களிலுமோ அசாதாரணமான பாரமான தண்மையை உணர்தல், மார்பகத்தில் எரிவு, ஒருவகை இறுக்கமான உணர்வு, அசௌகரியம் என்பன மட்டுமே தோன்றுவதும் இந்த வகையையே சாரும்.
இந்த வலி அல்லது அசௌகரியம் தொடர்ச்சியாக இருக்கலாம் அல்லது விட்டு விட்டு வரலாம். உங்களது நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூராக அமையலாம்.
இதனை 3 வகையாக பிரிக்கலாம்.
1. மாதவிடாய் சக்கர சுழற்சி சார்ந்து மார்பில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் வலி அல்லது அசௌகரியம்:
பொதுவாக பெண்களில் காணப்படுவது இந்த வகைக்குரியது.
மாதவிடாயின் போது உடலில் ஏற்படும் ஓமோன்களின் மாற்றங்களால் ஏற்படுகிறது. மாதவிடாய் சக்கரத்தின் பிந்திய இரண்டு வாரங்களில் வலி அல்லது அசௌகரியம் அதிகரித்து பின்னர் குறைவடையும்.
அறிகுறிகள்:
மார்பு முழுக்க வலி அல்லது அசௌகரியம் இருக்கும்.
பொதுவாக வலி அல்லது அசௌகரியம் இரண்டு மார்பகங்களிலும் ஏற்படும். சிலருக்கு ஒரு மார்பகத்தில் ஏற்படலாம்.
மாதவிடாய் சக்கரத்துடன் மாதம் மாதம் ஏற்படும்.
கற்பம், பாலூட்டும் காலம், மாதவிடாய் நிற்பதை அண்மிக்கும் காலம், ஓமோன் மருந்துகள் பாவிக்கும் காலங்களில் இது ஏற்படும்.
கொழுப்பு உணவுகள், கெபைன் உட்கொள்ளல் (உதாரணம்: கோப்பி,தேயிலை, சொக்லட், உற்சாக பானங்கள், சோடா, சில ஐஸ் கிரீம்கள், சில மருந்துகள் ), சில மருந்துகளின் பாவனை என்பன இந்தவகை நோவை அல்லது அசௌகரியத்தை அதிகரிக்கும்.
2. மாதவிடாய் சக்கர சுழற்சி சாராது மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் வலி அல்லது அசௌகரியம்:
மாதவிடாய் சக்கரத்தில் ஏற்படும் ஓமோன்களின் அளவு மாற்றம் சாராமல் மார்பகங்களின் அதிக பருமன், மார்பகங்களில் நீர்க் கட்டிகள், கற்பம், மார்பகங்களில் அடி படுதல் (உதாணமாக குழந்தைகள் விழுதல், அடித்தல், வாகன சீட் பெல்ட் இறுக்கம், அதிக இறுக்கமான ஆடைகள் அணிதல், அதிக தளர்வான அல்லது அதிக இறுக்கமான உள்ளாடை ), மார்பக கட்டிகள், கிருமித்தொற்று, சேல் கட்டி, மார்பகங்களில் சத்திர சிகிச்சை, மார்பக தோலின் இரத்தக்குழாய்களில் ஏற்படும் மாற்றங்கள், மார்பக புற்று நோய் போன்ற பொதுவான காரணங்கள் மற்றும் இன்னும் பல காரணங்களால் ஏற்படுகின்றன.
அறிகுறிகள்
பொதுவாக ஒரு மார்பகத்தில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படும்.
தொடர்ச்சியான அல்லது விட்டு விட்டு வலி ஏற்படலாம்.
கிட்டத்தட்ட 5 வீதமானோரில் இது மார்பக புற்றுநோயின் அறிகுறியாகவும் அமைகிறது.
3. மார்பகத்தில் அல்லாது உடலின் வேறு தொகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளின் விளைவினால் மார்பகத்தில் ஏற்படும் வலி அல்லது அசௌகரியம்:
இங்கே பிரதான பிரச்சினை வேறு எங்கோ இருக்க, இதன்போது உருவாகும் சில இரசாயனங்கள் இரத்தத்தில் கலந்து மார்பில் ஏற்படும் சில மாற்றங்களால் மார்புவலி அல்லது அசௌகரியம் ஏற்படுகிறது.
உதாரணமாக பின்வரும் பொதுவான நோய் நிலைகளின் போது இவ்வாறு மார்புவலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம்
பித்தப்பை கல் நோய், இதய நோய்கள், சுவாச மென்சவ்வு நோய்கள்,உணவுக்கால்வாயின் பகுதகளில் ஏற்படும் சில நோய்கள், தசை மற்றும் எலும்பு சார்ந்த நோய்கள், கழுத்து எலும்பில் ஏற்படும் நோய்கள்.
உள நோய்களுக்கும் ஏனைய சில நோய்களுக்கும் சில மருந்துகளை பயன்படுத்தும் காலத்திலும் இந்த நோவு அல்லது அசௌகரியம் ஏற்படலாம்.
அறிகுறிகள்
வேலைகள் செய்யும்போது மாத்திரம் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் அது தசை, எலும்பு அல்லது இதயம் சார்ந்த நோய்களால் ஏற்பட்டதாக அமையலாம்.
அல்சர் நோய் உள்ளோரின் உணவுக் கால்வாயில் ஏற்படும் நோவு மார்பக நரம்புகளுக்கு பரவுவதால் இந்த மார்பக வலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம்.
அத்தோடு மன அழுத்தம் மற்றும் அதிக பதற்றம் அல்லது அச்சம் கொண்டவர்களில் காரணமின்றி இந்த மார்பு வலி அல்லது அசௌகரியம் அவதானிக்கப்படுகிறது.
உங்களது மார்பக வலி எதனால் ஏற்பட்டது? அது பாரதூரமான நோயின் அறிகுறியா? என்பதை அறிய முறையான வைத்திய ஆலோசனை மற்றும் முறையான வைத்திய பரிசோதனை அவசியம்.
பரிசோதனையின் பின்னர் பிற காரணிகள் இன்றி ஓமோன் மாற்றங்களால் ஏற்படும் மார்பக வலி அல்லது அசௌகரியம் எனில் அதனை கட்டுப்படுத்த அல்லது குறைக்க என்ன செய்யலாம்?
1. பொருத்தமான அளவுடைய உள்ளாடையை பொருத்தமான அளவு இறுக்கமாக அணிதல்: இதனால் மார்பகத்தின் தோலையும் நெஞ்சுத் தசையையும் இணைத்து மார்பை தாங்கி இளமையில் மார்பின் வடிவத்தை தரும் கூப்பர் லிகமன்ட் எனும் சவ்வு அளவுக்கதிகமாக இழுபடாமல் தடுக்கப்படும். அவ்வாறு இழுபடுவதனால் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் வலி அல்லது அசௌகரியம் தவிர்க்கப்படும்.
2. அதிக அச்சம் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் மன அமைதியை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுதல்: உதாரணமாக யோகா, நண்பர்களுடன் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
3. உடற்பயிற்சி: உடல் எடையை குறைத்து மார்பின் மேலதிக கொழுப்பை குறைத்து மார்பின் அளவை குறைக்கும். இதனால் வலி குறையும்.
உடற்பயிற்சியின் போது சுரக்கப்படும் என்டோபின் எனும் இரசாயனம் மார்பக வலியை குறைக்கும்.
4. கெபைன் மற்றும் மெதைல்சான்தினை கொண்ட உணவுகளை கட்டுப்படுத்துதல்.
உதாரணமாக:சொக்லட்,தேயிலை, குளிர்பானங்கள், இறைச்சி போன்ற கொழுப்பு உணவுகள் என்பன.
5.எத்தகைய உணவை அதிகம் உண்ண வேண்டும்?
நார்ச்சத்துள்ள இலைக் கறிகள், பழங்கள்
தானியங்கள்
நட்ஸ் ( தாவர விதைகள்)
மீன்கள்
சமையலுக்கு ஒலிவ் ஒயில் பயன்படுத்துதல்
6. உப்பை குறைக்கவும்: உப்பானது உடலில் நீரை தேக்கி வைக்கும். இதனால் மார்பக திசுக்களுக்குள் நீர் தேக்கி ஏற்படும் வீக்கம் மற்றும் பார்த்தால் மார்பக வலி அல்லது அசௌகரியம் அதிகரிக்கும்.
7. சீனி உட்கொள்வதை கட்டுப்படுத்துதல்:
சீனியானது நீரை தேக்கி வைத்திருக்கும், மார்பக திசுக்களினுள் அசாதாரன மாற்றத்தை ஏற்படுத்தும் (inflammation), இரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே மார்பக வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
முறையான மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனையின் பின்னர்
காரணத்திற்கு ஏற்ப ஸ்கான், மம்மோகிறபி, எம்.ஆர்.ஐ. போன்ற மேலதிக பரிசோதனைகளும்
இன்னும் தேவைப்பட்டால் FNAC எனும் சந்தேகத்திற்குரிய இடத்தில் உள்ள கலங்களை நுணுக்குக்காட்டி மூலம் பரிசோதித்தல் மற்றும் பயோப்சி பரிசோதனைகளும் தேவைப்படலாம்.
காரணத்திற்கு ஏற்ப மேலதிக மருந்துகள், ஏனையபரிசோதனைகள்
மற்றும் மேலதிக சிகிச்சை தீர்மானிக்கப்படும்.
நன்றி
டொக்டர் MNF. Mufliha
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை