04/11/2025
சீனி இனிப்பாக இருந்தாலும் அது ஒரு மெல்லக் கொல்லும் நஞ்சு என்பது உங்களுக்கு தெரியுமா?
Dr Arshath Ahamed
நான் தினமும் பார்க்கும் அதிகமான சிறுவர்களின் பற்கள் பழுதடைந்தவைகளாக காணப்படுகின்றன. சிலருக்கு ஒரு சில பற்களே ஒழுங்காக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒரு சில ஊர் பிள்ளைகளின் பற்களில் பாதி "புழுத்திண்டவைகளாக", மீதி ஓட்டை விழுந்தவைகளாக காணப்படுகின்றன.(உள் பெட்டியில் வந்து எந்தெந்த ஊர் டாக்டர், என்று கேட்க வேண்டாம்.ப்ளீஸ்) இதற்கு மிக முக்கியமான காரணம்;
பெரும்பாலான பெற்றோர்கள் சிறுவயதிலே குழந்தைகளுக்கு சீனியை உணவில் சேர்க்க தொடங்கி விடுகிறார்கள். ஒரு மாத பிள்ளைக்கே "சீனிபோட்ட டீ" கொடுப்பதாக சொல்லும் சில தாய்மார்களை கண்டிருக்கிறேன். 'ஏம்மா பிறந்த பிள்ளைக்கு டீ கொடுக்கிறீங்கனு!!' கடுமையாக பேசிய போது, "அது வந்து... இவக்கு மமா டீ காணா.. அதான் பொட்டி டீ கொடுக்கிறன்னு" என்னை கிறுக்கு பிடிக்க வைத்த தாய்மார்களின் அம்மாக்களும் உண்டு. (Mama Tea னா Breast Milk என்றும் பொட்டி டீ னா Formula Milk னும் அறிக)
இன்றைய நவீன வாழ்க்கை முறையில், நமக்கு உண்மையான எதிரி சீனி. Refined Sugar. கொழுப்பு அல்ல. முஹம்மது நபி, இயேசு நாதர், புத்தர் போன்ற சீர்திருத்த வாதிகள், அவர்கள் எல்லோரும் சேர்ந்து தாங்கள் வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்த சீனியை விட, அதிகமான சீனியை, நாம் இப்போது, சாதரணமாக ஒரே ஒரு நாளில் தின்று தீர்த்து விடுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. எல்லா மதங்களிலும், கலாச்சாரங்களிலும், பண்டிகை காலங்களில் மட்டும் உண்ணும் உணவாக, கொண்டாடும் பானமாக சீனி இருந்திருக்கிறது. கெவும், களு தொதல், மஸ்கட், வட்டிலப்பம், சர்க்கரைப்பொங்கல் என்று எந்த உணவை எடுத்தாலும் இது தான் கதை. ஏனெனில் அன்று சீனி/ சர்க்கரை ஒரு அரிய பொருள். கொண்டாட்ட காலங்களில் மட்டுமே வாங்க முடியுமான ஒரு பொருள். ஆனால் கைத்தொழில் புரட்சியின் பின்னர் அது மலிவாக, தாராளமாக , டெய்லி கிடைக்கும் ஒரு பொருளாக மாறிவிட்டது. விளைவு டயபடிக்,பிரசர், கிட்னிபெயிலியர், ஹார்ட் அட்டாக் , மூட்டு வருத்தம், குழந்தை பேறின்மை , கென்சர் என்று ஏகப்பட்ட நோய்கள். இவை எல்லாமே, எதோ ஒரு வகையில் நாம் உண்ணும் சீனியால் உண்டாவது என்பது உங்களுக்கு தெரியுமா?
பெரியவர்களில் மட்டுமல்ல, குழந்தைகளின் முதல் 1,000 நாட்களில் சீனி சேர்ப்பதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று தற்போது வெளியாகி இருக்கும் ஒரு முக்கிய ஆய்வு சொல்கிறது. ஒரு குழந்தையின் முதல் 1,000 நாட்கள் , கருத்தரித்தது முதல் குழந்தையின் இரண்டாம் ஆண்டு நிறைவடையும் வரை என்பது அவர்களின் வாழ்நாள் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான கால கட்டமாகும். இந்த காலகட்டத்தில் சீனி அளவைக் கட்டுப்படுத்துவது நீண்ட காலத்திற்குப் பல மகத்தான பலன்களை அளிக்கிறது என இந்தப் புதிய ஆய்வு சொல்கிறது. இதையே பல வருடங்களாக நானும் சொல்லி வருகிறேன் ஆனால் கேட்பார் யாருமில்லை.
ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் முதல் நாளில் இருந்து சீனியை கட்டுப்படுத்துவதால், தொடர்ந்து இரண்டு வயது வரை சீனியை சீனி சேர்த்த உணவுகளை கொடுக்காமல் தவிரப்பதால் கீழ் வரும் நிரந்தர ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
1.நாட்பட்ட நோய்கள் குறைவு: சிறு வயதில் சர்க்கரை குறைவாக எடுத்துக்கொண்டவர்களுக்கு, பெரியவர்களான பிறகு டைப் 2 நீரிழிவு நோய் 35% வரையும், உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) 20% வரையும் குறைகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சீனி/ சர்க்கரை தட்டுப்பாடு காலத்தில் பிறந்தவர்களைப் பற்றிய ஆய்வும் இதையே உறுதிப்படுத்துகிறது.
2.ஆரோக்கியமான சுவை விருப்பங்கள்: இந்த ஆரம்ப காலத்தில் அதிக சர்க்கரையைத் தவிர்ப்பதன் மூலம், குழந்தையின் நாக்கு அதிக இனிப்புச் சுவைக்கு அடிமையாவதைத் தடுக்கலாம். இது பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற இயற்கையான உணவுகளை அவர்கள் ரசித்துச் சாப்பிட உதவுகிறது. சீனி சேர்த்து பால் கொடுத்த அதிகமான குழந்தைகள் பெரும்பாலும் இரண்டு வயதை அடையும் போது நிறை குறைந்தவர்களாகவும் வேறு உணவுகளை விரும்பி உண்ணாதவர்களாகவுமே இருக்கின்றனர்.
3. உடல் பருமன் குறைவு: சர்க்கரை நிறைந்த உணவுகள் ஊட்டச்சத்து இல்லாத, கலோரிகளை மட்டுமே கொண்டிருக்கும். ஆரம்பத்திலேயே சர்க்கரையைத் தவிர்ப்பது, சிறுவர்கள் மற்றும் பெரியவர்களிடையே ஏற்படும் உடல் பருமனைத் தடுக்க உதவுகிறது. தற்போது அதிகரித்து வரும் Adolescent Obesityற்கு சீனி மற்றும் இனிப்பு பண்டங்கள் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
4. வளர்சிதை மாற்ற(Metabolic Health) ஆரோக்கியம்: சர்க்கரையின் கட்டுப்பாடு, உடலின் இயல்பான வளர்சிதை மாற்றச் செயல்முறைகளைப் பாதுகாத்து, இன்சுலின் எதிர்ப்பைத் (Insulin Resistance) தடுக்கிறது. இதனால் கொழுப்பு கல்லீரல் (Fatty Liver: ஊரில் உள்ள 90%மானவர்களுக்கு இந்த போய் உண்டு. உங்களுக்கும் உண்டா என்பதை பரிசோதித்து அறிய விரும்புவர்கள் FibroScan, AST , ALT பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்) , நீரிழிவு, PCOS மற்றும் இதய நோய் அபாயங்கள் குறைகின்றன.
5. மூளை வளர்ச்சியில் பங்களிப்பு: அதிக சர்க்கரை/ சீனி கொண்ட உணவு மூளையின் வளர்ச்சி முறையை மாற்றுகிறது. இது கற்றல் மற்றும் நினைவாற்றலில் நிரந்தர குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்று விலங்கு ஆய்வுகள் காட்டுகின்றன. சீனியை கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுவர்களின் நினைவாற்றல் மற்றும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
6. பசியின்மை கட்டுப்பாடு: சர்க்கரை/ சீனி அதிகமாவது, பசியை ஒழுங்குபடுத்தும் மூளையின் வழிமுறைகளைக் குழப்பி, வயிறு நிரம்பும்/ திருப்தியடையும் உணர்வை அறிந்துகொள்ளும் திறனில் தலையிடுவதன் மூலம் அடிக்கடி பசியை ஏற்படுத்தி அதிக சீனி/ மாப்பொருள் உணவு உண்பதை ஊக்கப்படுத்துகிறது.
7. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள்: குழந்தையின் குடல் நுண்ணுயிரிகள் இந்த 1,000 நாட்களில் வேகமாக வளரும். தாய்ப்பாலில் உள்ள HMOs போன்ற சர்க்கரை அல்லாத பொருட்கள், நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கின்றன. அதே சமயம், அதிக சர்க்கரை; ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களைத் தூண்டி, ஒவ்வாமைகள் (Allergies) மற்றும் ஆஸ்துமா போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன.
ஓகே. இவ்வளவு பிரச்சினைகள் நோய்கள் சீனியினால்/ சர்க்கரையினால் ஏற்படுகிறது என்றால், சர்க்கரை/ சீனி அளவை நிர்வகிக்க, குறைக்க எளிய வழிகள் எவை?.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சர்க்கரை/ சீனி அறவே கூடாது: இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த ஒரு சீனி / சர்க்கரையும் (Added Sugars) சேர்க்கப்பட்ட உணவையும் வழங்கக் கூடாது என்று பல்வேறு சர்வதேச சிறுவர்நல அகாடெமிகள் உறுதியாக பரிந்துரைக்கின்றன. ஆகையால் பின்வரும் நடவடிக்கைகள் மூலம் உணவில் சீனி சேர்வதை தடுக்க முடியும்.
1.பழச்சாறுகளைக் கட்டுப்படுத்துங்கள்: வீட்டில் தயார் செய்த பிரஸ் 100% பழச்சாறில் கூட அதிக சர்க்கரை உள்ளது. முழுப் பழங்களில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சப்படுவதைத் தாமதப்படுத்துவதால், முழுப் பழங்களை துண்டுகளாக வெட்டி, அல்லது மசித்து கொடுப்பதே சிறந்த வழி. சீனி, தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.
2. லேபிள்களைப் படிக்கவும்: குழந்தைகளுக்கு கொடுக்கும் பிஸ்கட், தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குழந்தை உணவுகள், ட்ரிங்க்ஸ் வகைகள் , டொபி சாக்லெட் உட்படப் பலவற்றில் மறைந்திருக்கும் சர்க்கரைகளைக் கண்டறிய, அந்த உணவுகளில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களைப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்படி படித்தால் மாத்திரமே, அவைகளை கொடுப்பது, குழந்தைகளுக்கு ஏற்புடையது அல்ல என்பது விளங்கும்.
3.முடிந்த அளவு தாய்ப்பால் கொடுங்கள்: தாய்ப்பால் இயற்கை சர்க்கரைகளைக் கொண்டிருந்தாலும், அது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் சர்க்கரையின் எதிர்மறை விளைவுகளை எதிர்த்துப் போராடும் பல நன்மை பயக்கும் சேர்மங்களையும் ஒருங்கே குழந்தைகளுக்கு வழங்குகிறது.
ஆகவே, இந்த ஆரம்பகால ஊட்டச்சத்து தேர்வுகள் உங்கள் குழந்தையின் வருங்கால ஆரோக்கியத்திற்கு ஒரு வலுவான, ஆரோக்கியமான அடித்தளத்தை அமைக்க உதவுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
குழந்தையின் முதல் 1,000 நாட்கள் என்பது வெறும் ஒரு கால கட்டம் அல்ல; அது ஒரு சக்திவாய்ந்த, வாழ்வை தீர்மானிக்கும் அடித்தளம். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் ஊட்டச்சத்துத் தேர்வுகள்தான், உங்கள் குழந்தையின் மூளை, வளர்சிதை மாற்றம் (Metabolism), மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) சரியாக வடிவமைப்பு செய்கின்றன. உங்கள் வருங்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தை வடிவமைத்து, கட்டமைக்கின்றன. முழுமையான, சத்துக்கள் நிறைந்த உணவை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், தலைமுறைகளுக்குப் பலன் தரும் மிகச் சிறந்த ஒரு முதலீடாகும்.