25/03/2021
நமக்கு தோன்றும் எண்ணங்களை நீங்கள் எப்போதாவது நிதானமாக கவனித்தது உண்டா?
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறது. அத்தனை எண்ணங்களையும் நாம் மிகவும் சுலபமாக கடந்து சென்று விடுகிறோம்.
நமக்கு வரக்கூடிய எல்லாம் எண்ணங்களை எல்லாம் பகுப்பாய்வு செய்தால் நாம் யார் என்று தெரிந்து விடும் என சொல்வதில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கிறது?
எப்போதாவது நிதானமாக அப்படி என்ன தான் நமக்கு எண்ணங்கள் வருகிறது என்று ஒரு நிமிடம்,ஒரேயொரு ஒரு நிமிடம் நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும். அத்தனை எண்ணங்கள்...நடந்து முடிந்த,நடக்க போகிற,நடந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் நினைக்கிற,இல்லை நடக்கவே நடக்காத என ஏராளமான எண்ணங்கள் நமக்குள் ஒரு நிமிடத்தில் தோன்றி மறைகிறது.
நாம் சிந்திக்கிறோம் அதனால் தான் நாம் இருக்கிறோம் ( I think therefore iam) என்கிறார் டெஸ்கார்டிஸ்.
இந்த எண்ணங்கள் தான் நமது மனதின் அடையாளம். எண்ணங்கள் எதுவும் நமக்கு தோன்றவில்லையென்றால் நமது மனம் வேலை செய்யவில்லை என்று பொருள். நாம் தூங்கினால் கூட மனம் தூங்குவதில்லை அப்போதும் நமக்குள் எண்ணங்கள் தோன்றி கொண்டு தான் இருக்கும். நாம் அதனை ஒரு கனவாக கண்டு கொண்டிருப்போம்.
“அவ மனசுல என்னதான் டாக்டர் இருக்குது?”
“இன்னொருத்தர் மனசுல தோன்றும் எண்ணங்களை தெரிந்து கொள்ள முடியுமா டாக்டர்”
இது போன்ற கேள்விகளை நான் பல தருணங்களில் கடந்து வந்திருக்கிறேன்.
அடுத்தவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் இருக்கட்டும், நம் மனதில் நாம் என்ன நினைக்கிறோம் என்று எத்தனை பேருக்கு தெரியும்?
ஒரு காதல் ஜோடி என்னை பார்க்க ஒரு நாள் வந்தார்கள். “சார்,நாங்க ஆறு மாதமா லவ் பண்றோம் இப்போ பிரிந்து விடலாம்னு இருக்கோம் சார்” என்றாள் அந்த பெண்.
“சரி.அதுக்கு நான் எண்ண பண்ணனும்”
“எனக்கு ஒண்ணும் இல்ல சார்,இவனுக்கு தான் என்னை மறக்க முடியாதாம். எப்படியாவது அவனது மனதில் இருந்து என் நினைவுகளை அகற்றி விடுங்கள் சார்” என்றாள்.
நான் ஒரு நிமிடம் திகைத்து விட்டேன். அந்த பையனை பார்த்து கேட்டேன் “என்னப்பா அமைதியாவே இருக்க நீ சொல்லு உனக்கு என்ன பிரச்சினை” என்றேன்
அவன் கட கட என அழ தொடங்கினான்.
“டாக்டர், இவ இல்லாம என்னால இருக்க முடியாது டாக்டர்,என் மனசு முழுக்க இவ தான் இருக்கா,இவள பத்தியே எந்த நேரமும் யோசிச்சிட்டு இருக்கேன், திடீர்னு இவ இல்லனா என் மனசு தாங்காது டாக்டர்” என்றான்
இவர்கள் இரண்டு பேரும் சொன்னதில் இரண்டு விஷயங்களை எடுத்து பார்ப்போம். முதலாவது அந்த பெண் சொன்னது “இவன் மனதில் இருந்து என் நினைவுகளை அகற்றி விடுங்கள் டாக்டர்”
ஒருவர் மனதிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணங்களை அது சார்ந்த நினைவுகளை அகற்றி விட முடியுமா?
மனம் ஒரு ஊற்று போல. ஏராளமான எண்ணங்கள் அதிலிருந்து எப்போதும் சுரந்து கொண்டிருக்கின்றது,அப்படி உருவாகும் அத்தனை எண்ணங்களுக்கும் நாம் கவனம் தருவதில்லை. நாம் கவனம் தராத எண்ணங்கள் அத்தனையும் சில நொடிகளிலேயே நமது மனதின் பரப்பிலிருந்து தானாகவே வெளியேறி விடுகிறது.
நமது அப்போதைய உணர்வுகள் சார்ந்து,தேவைகள் சார்ந்து சில எண்ணங்களை மட்டும் நாம் கவனிக்க தொடங்குகிறோம் அப்படி கவனம் பெறும் எண்ணமானது மேன் மேலும் அது தொடர்பான பல எண்ணங்களை ஒரு சங்கிலி தொடர் போல உருவாக்குகிறது அது ஒரு சுழல் போல நம்மை அதனுள் இழுத்து செல்ல தொடங்குகிறது.அந்த சுழலில் நாம் மாட்டிக்கொண்டிருக்கும் வரை அந்த குறிப்பிட்ட எண்ண ஓட்டம் மட்டுமே நமது முழு மனதையும் ஆக்ரமித்து கொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு நாம் ஒரு பைக்கில் செல்கிறோம் ஏதாவது யோசித்து கொண்டே செல்கிறோம்,என்ன யோசித்து கொண்டிருந்தோம் என நிறுத்தி யோசித்து பார்த்தால் தெரியாத அளவுக்கு ஏதேதோ எண்ணங்கள் நமக்குள் நிரம்பியிருக்கும்.அத்தனையும் தேவையில்லாத எண்ணங்கள். நாம் எதற்கும் கவனம் தருவதில்லை.
திடீரென அழகான ஒரு பெண்ணை பார்க்கிறோம்,அந்த பெண் தொடர்பாக சில எண்ணங்கள் நமக்கு வருகிறது.நாம் அதற்கு கவனம் கொடுக்க தொடங்குகிறோம். இப்போது நமது எண்ண ஓட்டம் முழுதும் அந்த பெண் தான் இருக்கிறாள்.தண்ணி லாரி அடிக்கும் ஹாரன் கூட நம் காதில் விழுவதில்லை. அந்த அளவுக்கு அந்த பெண் நம் மனம் முழுமையும் ஆக்ரமிப்பு செய்து விடுகிறாள்.
நாம் போகும் இடம் வந்து விடுகிறது.அங்கு நமக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி இருக்கிறது. மேலதிகாரி கூப்பிட்டு “சார் உங்க சேவை எங்க கம்பனிக்கு போதும் இதோட நீங்க வீட்டுக்கு போலாம்” என்கிறார்.
இப்போது பொங்கி வரும் வேறு விதமான எண்ண ஓட்டத்தில் அந்த பெண் அடித்து சென்று எங்கோ வீசப்படுகிறாள்.திரும்ப ஒரு முறை பார்த்தால் கூட அவளை யார் என்று நமக்கு தெரியாது.
நமது மனதிலிருந்து எந்த ஒரு எண்ணங்களையும் நம்மால் அழிக்க முடியாது. அப்படி அழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நமது தோல்விகள்,அவமானங்கள்,துரோகங்கள்,வாதைகள் என அத்தனையும் அழித்து விடலாம்.ஆனால் நம்மால் அவற்றை அழிக்க முடியாது.
இன்னும் சொல்ல போனால் நாம் அழிக்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என நினைக்கும் எண்ணங்கள் தான் இன்னும் வலிமையாக சேர் போட்டு நமக்குள் அமர்ந்து கொள்ளும்.
“அவள பத்தியே நினைக்க கூடாதுடா” என நீங்கள் நினைத்தால் இன்னும் நீங்கள் அவளை பத்திதான் நினைத்து கொண்டு உள்ளீர்கள் என்று பொருள்.
மாறாக அந்த குறிப்பிட்ட எண்ணத்திற்கு நாம் கொடுக்கும் கவனத்தை, முக்கியத்துவத்தை நிறுத்துவதன் மூலமாக நாளடைவில் அந்த எண்ணத்தை நமது மனதிலிருந்து அகற்றி விடலாம். முக்கியத்துவம் அற்ற எந்த எண்ணமும் மனதில் இருந்து அதுவாகவே அழிந்து விடும்.
“சார்,இவர் என் கணவர் தான் எப்போது பார்த்தாலும் குடி, அவருக்கே தெரியாமல் ஏதாவது மருந்து கொடுத்து குடிக்கிற எண்ணத்தையே அவர் மனசுல எடுத்துறுங்க டாக்டர்” என்று ஒரு பெண் டிவியில் ஒருவரிடம் கேட்டு கொண்டிருந்தார்.
அந்த டாக்டரும் (அவர் டாக்டரா?) தனது மருந்தை, குடிக்கும் எண்ணத்தை அழிக்கும் மருந்து என விளம்பர படுத்தி கொண்டிருந்தார்.
எண்ணத்தை அழிப்பதற்கு என்று எந்த ஒரு மருந்தும் இல்லை. அப்படி இருந்தால் குடிக்கும் எண்ணத்தை மட்டும் ஏன் அழிக்க வேண்டும்,நமக்கு தேவையில்லாத அத்தனை எண்ணங்களையும் அழித்து விடலாமே!
எண்ணங்களை அழிக்க வேண்டுமானால் அதற்கு நாம் முதலில் நம் மனதை தான் அழிக்க வேண்டும்.
நமது எண்ணங்கள் தான் நம் அறிவு.
மனம் ஒரு கூகுள் போல, நாம் ஏதாவது ஒரு பிரச்சினையில் இருக்கும் போது அதற்கான தீர்வு என ஆயிரம் விதமான எண்ணங்களை அது நமக்கு காட்டும்.அதிலிருந்து எந்த தீர்வை தேர்ந்தெடுப்பது என்பதே ஒரு குழப்பமானதாக இருக்கும்.
நமது பிரச்சினையின் சாரம் முழுமையாக முழுமையாக அதற்கான தீர்வும் மிகவும் சரியானதாக மிகவும் தெளிவானதாக இருக்கும்.
எவ்வளவு வேகமாக நமது எண்ண ஓட்டம் இருக்கிறதோ அவ்வளவு சிறப்பாக நம்மால் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியும்.
ஒரு ஆப்பிள் கீழே விழும் போது அது ஏன் விழுகிறது என்ற எண்ணம் தான் இயற்பியலின் அத்தனை விதிகளுக்கும் அடிப்படை. அது நியுட்டனின் கவனத்தை பெறாமல் விட்டிருந்தால் அது ஒரு சாதாரண நிகழ்வாக தான் இருந்திருக்க முடியும்.
நமது எண்ணங்கள் அத்தனை வலிமையானது. மனதின் குரல் என்பது ஒருவருக்கு தோன்றும் எண்ணங்கள் தான்.
திரும்பவும் டெஸ்கார்டிஸின் இந்த கூற்றை படித்து பாருங்கள் “நான் சிந்திக்கிறேன் அதனால் நான் இருக்கிறேன். I think therefore I am.