02/08/2018
திருப்பூரில் ஒரு தாயை இழந்தது போதாதா??
"கர்ப்பம் ஒரு நோயல்ல..
அதற்கு மருத்துவம் தேவையில்லை,
அனாடமிக் செவிவழி பயிற்சி,
தடுப்பூசி இல்லாமல் குழந்தை வளர்ப்பது,
தடுப்பூசி ,ஸ்கேன் ,மருந்து ,மருத்துவமனை எதுவும் இல்லாமல் பிரசவம் பார்ப்பது..
இது போன்ற பல பேச்சுக்கள் சமீபமாக கேட்கின்றோம் , வயிறு பற்றிக்கொண்டு வருகிறது, ஒவ்வொரு மருத்துவரும் செவிலியரும் தாய் குழந்தை காப்பாற்றுவதற்கு எவ்வளவு உழைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்
கர்ப்பம் ஆன தேதியில் இருந்து பிரசவத்திற்கு பின் 42 நாட்கள் வரை உள்ள இந்த காலத்தில் தாய் மரணமடைந்தால் அது கர்ப்ப கால தாய் மரணமாக கொள்ளப்படுகிறது.
ஒரு லட்சம் பிறப்பிற்கு எத்தனை தாய்மார்கள் இப்படி இறக்கிறார்கள் என்பதை வைத்தே ஒரு நாடு எத்தனை முன்னேறி இருக்கிறது என்று கூறிவிடலாம்..
தமிழ்நாட்டின் தற்போதைய MMR - 67 க்கு குறைந்துள்ளது
அதாவது வருடத்திற்கு ஒரு லட்சம் பிறப்புகள் நடக்கும் ஒரு ஊரில்
1980களின் இறுதியில் 450 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர் அதுவே 2015 இல் 60 ஆக குறைந்துள்ளது.
இன்று நாட்டில் சிறப்பாக MMR ஐ குறைத்த மாநிலமாக தமிழ்நாடு மத்திய அரசிடம் விருது வாங்கியிருக்கிறது.
இந்த மாற்றம் எப்படி நடந்தது?
இது அனைத்தும் அரசின் கொள்கை, அரசு MMRஐ குறைக்க செலவிட்ட செலவினம், அரசு மருத்துவர்களின் அற்பணிப்பு , கிராம சுகாதார செவிலியர்களின் உழைப்பு , செவிலியர்களின் கண் அயறா பணி , தனியாரில் மேம்பட்ட சேவை கிடைக்கச்செய்தது போன்ற பல விசயங்கள் தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களில் நடந்தது.
தமிழக சுகாதார துறை தனது விருட்ச வேர்களை சமூகத்தின் அடித்தளம் வரை பரவவிட்டிருக்கிறது.
எந்த ஒரு மருத்துவரும் ஒரு கர்ப்பவதிக்கு நார்மல் டெலிவரி தான் செய்ய வேண்டும் என்று விரும்புவர், அதையும் மீறி சிசேரியன் நடக்கிறது என்றால் அது கண்டிப்பாக அந்தக் குழந்தையோ அல்லது தாயைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே,..
சில அரைவேக்காடு இயக்குனர்கள் இயக்கிய படங்களை பார்த்துக்கொண்டு ,வேலை வெட்டி எதுவும் இல்லாமல் மக்களை குழப்புவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் வாய்க்கு வந்ததை உளறி அதை சிடியாக விற்பவர்களையும் நம்பி நம்மையே நம்பியிருக்கும் மனைவிமார்களையும் மகள்களையும் துரோகம் செய்து விட வேண்டாம்...
கர்ப்பம் என்பது இயற்கையானது தான் ஆனால் அந்த கற்பகாலத்தில் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் பல பிரச்சினைகள் வருவது இயல்பு, ஆகையால் அந்த கர்ப்பகாலத்தில் ஒழுங்காக தடுப்பூசி போட்டு ,ஸ்கேன் செய்து ,இரும்பு சத்து போலிக் ஆசிட் மாத்திரைகள் உண்டு மருத்துவரை அவ்வப்போது சந்தித்து தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டியது நமது கடமை.
அதேசமயம் இயற்கை மருத்துவம், மருத்துவர் இல்லாத மருத்துவம், மருத்துவமனை இல்லாத மருத்துவம், என்று கூறிக் கொண்டு வருபவர்கள் மூஞ்சியில் உமிழ்ந்து விரட்டி அடிக்க வேண்டும் ,அவர்கள் கண்டிப்பாக நம் நாட்டுக்கும் ,நம் குடும்பத்திற்கும் துரோகம் செய்பவர்களே.