21/10/2016
இப்படி ஒரு கனவு வந்துள்ளது.
சிவ.கதிரவன்.
உங்களுக்கு கனவுகளில் நம்பிக்கை இல்லை என்றால் இதனை படிக்க வேண்டாம். ஏனெனில் கனவுகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த உரையாடலை எவ்வளவு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவு பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலின் காரணமாக பகிர்ந்து கொள்கிறேன். எனவே கனவு பற்றி பேச்சு வருவதால் உங்களுக்கு கனவுகளில் நம்பிக்கை இல்லை என்றால் இதனை படிக்க வேண்டாம்.
கனவிற்குள் செல்வோம்.
கனவின் நாயகர் நம் நண்பர் திருவாளர் டியூப் லைட் அவர்கள். அவர் ஒரு கலவையான ஆள், அப்படியென்றால் இப்படிதான் என்று அவரை வகைப்படுத்த முடியாது. கோபம் கவலை பயம் என எல்லா உணர்ச்சிகளும் உடையவர். பணம் பணம் என்று பணத்திற்கு பின்னால் ஓடுவார், திடீரென்று பணமெல்லாம் தேவை இல்லை என்று தத்துவம் பேசுவார். சில மாதம் அரசு வேலை, சில நாட்கள் தனியார் வேலை, கொஞ்சநாள் ஒப்பந்த வேலை என்று பல நிறுவனங்களில் வேலை பார்ப்பவர் இப்படி ஒரு கலவையான ஆள்தான் டீயூப் லைட். ஒரு நாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவர் பேசுகிறார்
அந்த உரையாடல்...
டீயூப் லைட்: ஹலோ
ஒரு பெண்குரல்: ஹலோ நாங்கள் துஷ்ப்ரயோகம் நிறுவனத்தில இருந்து பேசுகிறோம், என் பெயர் துர்தேவதை.. எங்க கம்பெனியின் சில ஆஃப்ர் பற்றி உங்களிடம் பேச வேண்டும் இப்போது பேசலாமா. .
டீயூப் லைட்: சொல்லுங்கள் பேசலாம்.
துர்தேவதை.: நீங்கள் பயன்படுத்தும் எங்கள் சேவைகளில் சில புதிய ஆஃபர் வந்துள்ளது. மேலும் உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது.உங்களுக்கு ஆர்வம் உள்ளதா?
டீயூப் லைட்: கண்டிப்பாக, நான் என்ன செய்யவேண்டும்?
துர்தேவதை.: மகிழ்ச்சி. அப்படியென்றால் உங்கள் பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு அலுவலகம் வாருங்கள்,
டீயூப் லைட்: உடனே வருகிறேன்.
துர்தேவதை.: நல்லது வாருங்கள்.
திருவாளர் டீயூப் லைட் துஷ்ப்ரயோகம் நிறுவனத்தின் அலுவலகம் வருகிறார். அது ஒரு மழை நேரம் அலுவலகத்தில் அழகானப் பணிப்பெண்கள் வரவேற்கின்றனர். பணிப்பெண்கள் விபரம் கேட்டு அமர வைக்கின்றனர். அமர்ந்துள்ளார்
டீயூப்லைட் அழைக்கப்படுகிறார்.
அவருடன் பணிப்பெண் பேசுகிறார். வணக்கம் நாந்தான் துர்தேவதை என்கிறாள். அப்பெண் நிறைய அலங்காரங்களும் நிறைய வாசனைகளும் பூசியிருந்தாள்..
அவர்களின் உரையாடல்..
துர்தேவதை : திரு ட்யூப்லைட் நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி...
டீயூப் லைட்: வணக்கம்.உங்கள் ஆபிஸில் இருந்து வரச்சொன்னாங்க. பாஸ்போர்ட் எல்லாம் எடுத்துவந்துருக்கேன்.
துர்தேவதை : ஆமாம் ஸார், உங்களுக்கு ஏற்கனவே எல்லாம் தெரிஞ்சு இருக்கும். ஏன்னா நீங்கள் எங்கள் துஷ்ப்ரயோகம் நிறுவனத்தின் சுமார் 287 பொருட்களை இலவசமாகவும் ஆஃப்ர்லேயும் வாங்கி பயன்படுத்தி இருக்கிங்கிங்க. நீங்க எங்களோட முக்கியமான கஷ்டமர்..
டீயூப் லைட்: ஆமாம் எப்படி உங்களால் இவ்வளவு இலவசங்கள் ஆஃப்ர்கள் தரமுடிகிறது.?
துர்தேவதை : அதுவா எங்கள் நிறுவனத்தலைவர் நிறையத் தொழில் செய்து வருகிறார். உலகில் உள்ள எல்லாத்தொழில்களும் எங்கள் தலைவருக்குத் தெரியும். அதில் வரும் லாபங்களை பிறதொழில்களில் முதலீடு செய்து லாபத்தை பெருக்கிக்கொள்வார். அவருக்கு நல்லதொழில் கெட்டதொழில் என்றெல்லாம் தெரியாது. எல்லாமும் தொழில்தான். அதன் லாபம்தான் இலக்கு...
என்றவாறு ஏதோ புத்தகங்களை அடுக்கி கொண்டே பேசினாள்.
டீயூப் லைட்: நல்லது சொல்லுங்கள்
துர்தேவதை : ஆமாம். திரு டீயூப் லைட். இது வரை நீங்கள் பயன்படுத்திய பொருட்களுக்கு நாளையுடன் ஆஃபர் முடிக்கிறது. எனவே நீங்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு பணம் கட்ட வேண்டும். அதில் கட்டிய ரசீது எண்ணில் ஒன்றை தேர்வு செய்து வெளி நாட்டுச்சுற்றுலா அனுப்புவோம்.. பணம் கட்டிவிடுகிறீர்களா? மிஸ்டர் டீயூப்.. (அதான் டீயூப் லைட்டின் சுருக்கம்)...
டீயூப் லைட் சரி எவ்வளவு கட்ட வேண்டும்?
சிரித்த முகத்துடன் ஒரு தாளை அவனிடம் நீட்டும் போது டீயூப் லைட் முகம் அதிர்ச்சி அடைந்தது.
துர்தேவதை : சொல்லுங்கள் மிஸ்டர் டீயூப். எவ்வளவு பணம் கட்ட முடியும்? வேற என்ன சந்தேகம்?
டீயூப் லைட்:இல்லை இவ்வளவு பணம் போட்டுருக்கு,,, அதான் எனக்கு வேண்டாம் என சிலவற்றை நிறுத்திக்கொள்ளட்டுமா...
துர்தேவதை : தாராளமாக.. ஆனால் இவ்வள்வு நாள் பயன்படுத்தி பழகியிருக்கீங்களே மிஸ்டர்..
டீயூப் லைட்:ஆமாம் ஆனால் அதிகமாக செலவு வரும் போலவே?.. நான் தேவையற்றதை நிறுத்திக் கொள்கிறேன்.
துர்தேவதை :நல்லது உங்கள் விருப்பம் போலஸ் செய்யலாம். ஆனால் உங்களுக்கு வெளி நாட்டுப் பயணம் கிடைக்காது. சரியா.. இந்தவாய்ப்பை ஏன் தவறவிட வேண்டும் மிஸ்டர் டீயூப்...
டீயூப் லைட்: சரிதான் ஆனால் உங்கள் விலை எனது பட்ஜெட்டில் அடங்காது.. நான் நிறுத்திக்கொள்கிறேன். பரவாயில்லை. உங்கள் விலையை பார்க்க எனக்கு ஓடிவிடலாம் என்று தோன்றுகிறது...
துர்தேவதை : ஹாஹா.. மிஸ்டர் டீயூப் நீங்கள் அதெல்லாம் செய்ய வேண்டாம். ஏன் இவ்வளவு பயம்? ஓய்வாக இருங்கள். நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். உங்களை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வோம்..
டீயூப் லைட்:ஓய்வைக் கழிக்கத்தான் இத்தனையும் வாங்கினேன். இப்போது அதுவே கழுத்தை பிடிக்கிறது. இலலை எனக்கு வேண்டாம். எல்லாவற்றையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்...
துர்தேவதை : நல்லது. உங்கள் விருப்பம்..ஆனால் நீங்கள் புறப்படும் முன் தனிப்பட்டமுறையில் நான் பேசலாமா? நீங்கள் சம்மதித்தால்,,
டீயூப் லைட்: எந்த பொருளும் விற்க வில்லை எனில் பேசுங்கள்...
துர்தேவதை :நன்றி மிஸ்டர் டீயூப்லைட். விருப்பம் இல்லாத வேலையில் தான் சோர்வும் களைப்பும் ஏற்படும் என உங்களின் மனிதர்களும் புனிதர்களும் சொல்கிறார்கள்... ஏன் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையும் வெலையும் விருப்பமாக இல்லையா?
டீயூப் லைட் அமைதியாக யொசிக்கிறார்...
துர்தேவதை : மனிதன் வாழ பணம் தேவையில்லை. நீங்கள் சேர்க்கும் எல்லாப்பணமும் ஆஃப்ரில் எங்களிடம் செலவு செய்யத்தான்.. இன்னும் பத்துஆண்டுகளில் உங்களின் எல்லாப்பணமும் எங்களிடம் கட்டவேண்டியது வரும் என எங்கள் நிறுவனம் நடத்திய சர்வே சொல்கிறது...உங்களால் எதுவும் செய்யமுடியாது...
டீயூப் லைட்: அதெப்படி நான் உங்கள் நிறுவனத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் என்ன செய்வீர்கள்..
துர்தேவதை : ஹாஹாஹா... நாங்கள் இல்லை என்றால் வேறு நிறுவனம்.. அது ஒரு விசயமல்ல... மிஸ்டர்.. நாங்கள் உங்களுக்கு முதலில் இலவசமும் ஆஃபரும் தருவோம்.. பின் நீங்கள் பழகியவுடன் உங்களைப் பார்த்துக்கொள்வோம்.. அவ்வளவுதான்...
டீயூப் லைட் : புரியலயே..
துர்தேவதை : உங்களுக்கு புரியாது.. இப்போது நீங்கள் எங்களிடம் பயன் படுத்தியுள்ள சேவை 200க்கும் மேல்.. நீங்கள் உண்ணும் உணவு நாங்கள் தந்தது, உங்கள் பற்பசை,உங்கள் தண்ணீர், உங்களின் தேநீர், அதில் உள்ள சர்க்கரை, அதை ஊற்றும் கோப்பை, அமரும் நாற்க்காலிகள், சாப்பிடும் தட்டு எல்லாமும் நாங்கள் உங்களுக்கு பழக்கியதே... ஒரு நேரத்தில் ஒரு செனல் தான் பார்க்கமுடியும் என்றாலும் 80 செனல் பார்க்க பணம் கட்டவைத்துள்ளோம். ஒருவரிடம் மட்டுமே பேசத் தெரிந்த உங்களுக்கு 2 செல் போன். 3,4 சிம் கார்டு,, நாங்கள் கொடுத்தது...
டீயூப் லைட் : சரிதான்..
துர்தேவதை : என்ன சரிதான் எல்லாவற்றையும் இலவசத்தில் தான் பழகினீர்கள்.. உங்களின் மகன் வாகனம் கேட்ப்பது நாங்கள் சொல்லிக் கொடுத்தது. உங்கள் செல்லமகளின் தலை முடியில இருந்து கால் வரை பூசும் அத்தனையும் எங்களிடமே கற்றாள். இன்னும் யார் என்ன சாப்பிடவேண்டும் எப்படி சாப்பிடவேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் தீர்மானம் செய்வது நாங்கள்தான்...
டீயூப் லைட் :.....
துர்தேவதை : இன்னும் உங்கள் குழந்தையைக் கொஞ்சுவது எப்படி என உங்கள் தலைமுறை எங்களிடம் பார்த்துக் கற்றுக்கொள்ளும்.. நாங்கள் சொல்லும் படிதான் வளர்ப்பார்கள் சுயமாக பிள்ளை வளர்ப்பதை உங்கள் சமூகத்திடம் இருந்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்.. இன்னொன்று சொல்லவா...
டீயூப் லைட் :ம்ம்ம்...
துர்தேவதை : நீங்கள் உங்களின் காதலியைக் கொஞ்சுவதும் மனைவியுடன் உறவு கொள்வதும் கூட நாங்கள் காண்பிக்கும் படங்களின் வழியாக நடக்கும்.. எங்களின் ஆபாசப்படங்கள் உங்களின் காதலை ஆபாசப்படுத்தும்.. எங்களின் பரிந்துரைகள் உங்களின் இரவு நேர ரகசிய உரையாடலாக மாறும்... உங்களை முழுவதுமாக எங்களின் இலவசங்கள் மாற்றிவிடும்...
டீயூப் லைட் :ஓ..
துர்தேவதை : நீங்கள் விரும்பினாலும் மருத்தாலும் உங்கள் சிந்தனையை நாங்கள் கைப்பற்றிவிடுவோம்.. உங்கள் மரபு, வாழ்வியல், காதல் வீரம், அறம், கலவி, மகிழ்ச்சி என எல்லாவற்றையும் நாங்கள் தரும் இலவசங்க்களுக்குள் தொலைத்து விடுவீர்கள் மறந்து விடுவீர்கள்...
வெளியில் பெய்யும் மழைக்கு இடையே 'டம்' என்ற இடி சத்தம். நான் தூக்கம் விழித்துவிட்டேன்.. கனவில் அவர்களின் பேச்சு என்ன ஆனதென்று தெரியவில்லை... எனக்கும் கனவுகள் பற்றி ஒன்றும் கவலை இல்லை.. ஆனால் எனக்கு இப்படி ஒரு கனவு வந்துள்ளது...