31/12/2017
மூட் ஸ்விங்ஸ்( Mood swings)
பெண்கள் காரணமே இல்லாமல் திடீரென மூட் அவுட் ஆவதும், கோபம், எரிச்சல், அழுகை என்று தன்னை வருத்தி, தன் அன்புக்கு உரியவர்களைப் படுத்தியெடுத்துவிட்டு, பின்னர் தானாகவே சகஜமாகி, சரியாகிவிடுதையும் பார்த்திருப்போம். இந்த மூட் ஸ்விங்ஸ், அடிக்கடி அவர்களுக்கு நிகழும். காரணம்... அவர்களின் மாதவிலக்கு நாட்களை ஒட்டி நிகழும் ஹார்மோன் மாற்றங்கள்.
என்ன நிகழ்கிறது பெண்ணுக்குள்?
ஒரு பெண்ணின் மாதவிலக்கு சுழற்சி, பொதுவாக 28 நாட்கள். அந்த சுழற்சியில் அவள் ஹார்மோன்கள் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். குறிப்பாக, எஸ்ட்ரோஜன் ஹார்மோன். மாதவிலக்கு முடிந்த நாளில் இருந்து சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பிக்கும் இந்த ஹார்மோன் லெவல், இரண்டு வாரங்களில் உச்சம் தொட்டிருக்கும். கருமுட்டை வெளியானதுக்குப் (ஓவுலேஷன் - Ovulation ) பிறகான மூன்றாவது வாரத்தில், எஸ்ட்ரோஜன் ஹார்மோனின் லெவல் வடிய ஆரம்பிக்கும். மேலும், புரொஜெஸ்டிரானின் ஹார்மோன் லெவலிலும் மாற்றங்கள் ஏற்படும். நான்காவது வாரத்தில், எஸ்ட்ரோஜன் ஹார்மோன் லெவல் படிப்படியாகச் சரியும். இதுதான், மூட் ஸ்விங்ஸ் ஏற்படும் நாட்கள்.
சுழற்சியின் இறுதி வாரம், 21 - 28 நாட்கள் வரையிலான முன் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிரமங்கள், பெண்களால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. அந்நிலைதான் மூட் ஸ்விங்ஸ். மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைவலி, அடிவயிறு கனமாவது, வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி போன்றவை தோன்றும்.
ஹார்மோன்களின் விளைவாக உணர்ச்சிகள் அவளை உயரத்தில் எடுத்துச்சென்று நிறுத்தி, பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு என விளையாடும். ஆத்திரம், மனச்சோர்வு என இருவேறு மனநிலைகளில் பந்தாடப்படுவாள். மிகச் சிலருக்கு இந்த மூட் ஸ்விங்ஸின் வீரியம் மிகக் கடுமையானதாக இருக்கும். தற்கொலை மனநிலைவரை இழுத்துச் செல்லும். அப்படியானவர்கள், இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்ணின் நுண் உணர்வுகளோடு விளையாடும் இந்த மூட் ஸ்விங்ஸ் ஆட்டம், ஒரு வாரம், நான்கு நாட்கள், இரண்டு நாட்கள், ஒரு நாள் என ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் உடல்நிலையைப் பொருத்து நீடிக்கும்; சில மணி நேரங்களில்கூட தோன்றி மறையலாம். அவளுக்கு மாதவிலக்கு ஆரம்பிக்கும் நாளில், ஹார்மோன்களின் லெவல் முற்றிலும் வடிந்து சமதளத்துக்கு வருவதுடன், அவளின் அத்தனை மன ஊசலாட்டங்களும் அந்த நாளில் சட்டென மறைந்துபோகும். பின் மாதவிலக்கு முடிவில் இருந்து, மீண்டும் படிப்படியாக எஸ்ட்ரோஜன் ஹார்மோன் லெவல் அதிகரிக்கும் விளையாட்டு ஆரம்பமாகும்.
மாதம் ஒருமுறை மூட் ஸ்விங்ஸ்!
காதலியோ, மனைவியோ மாதம் ஒருமுறை காரணமே இல்லாமல் கத்தினாலும், கண்ணீர்விட்டாலும் கைகோத்து அவளை அதிலிருந்து கரைசேர்க்க வேண்டியதில், ஆண்களுக்கும் பொறுப்புண்டு. அவளைப்படுத்தும் ஊசலாட்டம் அவளால் தவிர்க்க முடியாத, அவள் கைமீறிய விஷயம். அதைப் புரிதலுடன் பொறுத்துக்கொள்ளும் அன்பே, அந்நாட்களுக்கான மருந்து.