30/10/2021
🏋️♀️🏋️♀️ஜிம் செல்வதால் தான் இதய செயலிழப்பு ஏற்படுகிறதா???💔💔
சமீப காலங்களில் ஜிம்களில் பயிற்சி செய்யும் போது சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன
இதை வைத்து ஜிம்களில் பயிற்சி செய்வது ஆபத்தானதா?
ஜிம்களில் பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ஆபத்தானதா? என்பது போன்ற ஐயங்கள் எழுகின்றன.
இதற்கான விளக்கமாக எனது இந்த பதிவு இருக்கும் என்று நம்புகிறேன்
ஜிம் எனும் உடற்பயிற்சிக்கூடத்தில் சிறப்பான முறையில் அங்கம் அங்கமாக தசைகளுக்கு வலுசேர்க்குமாறு தேகப்பயிற்சி வழங்கப்படுகின்றது.
அங்கு இதற்கென பிரத்யேக பயிற்சியாளர் இருப்பார். அவர் பயிற்சி எடுக்க வந்தவருக்குரிய பயிற்சிகளை முறையாகக் கற்றுக்கொடுப்பார்.
இதுவே ஜிம்கள் இயங்கும் முறை.
இதில் மிகக்குறைவான சதவிகிதம் பேர்
தங்களுக்கு ஆறடுக்கு வயிற்றுப்பகுதி வேண்டும் என்றும்
ஆணழகன் போட்டியில் பங்குபெற வேண்டும் என்றும் வருவார்கள்.
பெரும்பான்மை நபர்கள் எடை குறைப்புக்கும்
கூடவே தசைகளை வலுப்படுத்தவும் எடை தூக்கும் பயிற்சி, நடைப்பயிற்சி போன்வற்றில் பங்கு பெறுவார்கள்.
செய்திகளில் பெரிதாகப் பேசப்படுவதாலேயே மனணங்களுள் சில ஜிம்களில் நடந்ததால்
ஜிம் சென்றாலே இதயம் பாதிக்கும் என்ற எண்ணத்திற்கு வருவது தவறாகும்.
உடற்பயிற்சி , விளையாட்டு போன்றவற்றிக்கு முக்கியத்துவமே அளிக்காத நம் நாட்டில் இது போன்ற அவநம்பிக்கைகள் இன்னும் ஆபத்திலே தான் போய் முடியும்.
பெருநகரங்களிலும் சரி
சிற்றூர்களிலும் சரி
இப்போது தான் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்பட்டு உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று தங்களால் ஆகுமானவரை தேகப்பயிற்சி செய்யத்துவங்கியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக பெரும்பான்மை பெண்களுக்கு பொதுவெளியில் நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செல்ல இயலாமல் இருக்கும் நிலையில் பெண்களுக்கும் இந்ந உடல் பயிற்சி கூடங்கள் மிகத்தேவையான ஒன்றாக இருக்கின்றன.
தாங்கள் உடற்பயிற்சிக்கூடங்களை உபயோகித்து தேகப்பயிற்சி செய்பவராயின் அதை அச்சமின்றி தொடருங்கள்
பின்வரும் யோசனைகள் உங்களுக்கு உதவக்கூடும்
1. தங்களின் வயதென்ன? தங்களின் உடல் எடை என்ன? தங்களுக்கு இருக்கும் இணை நோய்கள் ( நீரிழிவு , ரத்த கொதிப்பு, இதய நோய் , சிறுநீரக நோய்) என்ன? போன்றவற்றை உங்களது மருத்துவரிடம் கூறி அவரிடம் தாங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து கருத்துக் கேளுங்கள்.
2. தங்களுக்கு உதவி புரியும் தேகப்பயிற்சியாளரிடமும் தங்களுக்கு இருக்கும் இணை நோய்கள் குறித்து கூறுங்கள்.
3. இதய நோய் இருப்பவர்கள் இதயத்துடிப்பை ஓரளவுக்கு மேல் ஏற்றும் உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். எனவே மிதமான உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள்.
4. அதீத உடல் சோர்வுடனும் மனச்சோர்வுடனும் ஜிம்மிற்குச் செல்லாதீர்கள்.
புத்துணர்வான எண்ணத்துடனும் தேகத்துடனும் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் நோய்வாய்பட்டிருக்கும் போது உடற்பயிற்சி செய்யக்கூடாது.
உண்ணாநோன்பில் இருக்கும் போது குறிப்பாக தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு பிடிக்கும் போது அதீத உடற்பயிற்சி தேவையற்றது.நோன்பை முறித்து விட்டு பிறகு உடற்பயிற்சி செய்யுங்கள்
5. நன்றாக வயிறு முட்ட உணவு சாப்பிட்டு விட்டு எப்போதும் உடற்பயிற்சி செய்யக்கூடாது.
நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் அதிக நேரம் வலுவான உடற்பயிற்சி செய்யக்கூடாது. ஹைப்போ க்ளைசீமியா எனும் ரத்த க்ளூகோஸ் அளவுகள் குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு.
6. உடல் தரும் அபாய சமிக்ஞைகளான
தலைசுற்றல் , குமட்டல் , வியர்த்துப்போதல் , படபடவென்று வருவது இவற்றை உதாசீனப்படுத்தாமல் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க வேண்டும்.
இத்தகைய அறிகுறிகள் இருந்தால்
இதய நோய் சிறப்பு நிபுணரிடம் ஒபினியன் வாங்க வேண்டும். எக்கோ ஸ்கேன் , ஈசிஜி எடுத்துப்பார்க்க வேண்டும்.
7. தாங்கள் இணை நோய்களான நீரிழிவு , இதய நோய் , ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு செய்து வரும் மருத்துவத்தை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
8. உடற் பயிற்சியை சிறிதிலிருந்து பெரிதாக
எளிதானதில் இருந்து கடினமானதாக
குறைவான நேரத்தில் இருந்து நீண்ட நேரம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கு நேரம் கொடுத்துக்கூட்ட வேண்டும்.
அதீத சுமையை திடீரென்று உடல் மீது ஏற்றக்கூடாது.
9. குறைவான காலத்தில் மிக அதிகமாக உடலை ஏற்றுவதோ
அதே குறைவான காலத்தில் மிக அதிமாக உடலைக் குறைக்க முயல்வதோ ஆபத்தில் முடியலாம். குறுக்கு வழியில் உடலை ஏற்றுவதற்கும் வலிமையைக் கூட்டுவதற்கும் உபயோகப்படுத்தப்படும் மருந்துகள் ஆபத்தானவை என்பதை அறிக.
இயன்ற அளவு இயற்கையான உணவு முறையில் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கச் செய்வது சிறந்தது. மீறி புரதச்சத்து பொடிகள் தேவை என்றால் அதை மருத்துவ கண்காணிப்பில் எடுப்பது சிறந்தது.
10. 30+ வயதாகியிருக்கும் மக்கள் கட்டாயம் வருடம் ஒருமுறை இணைநோய்களை கண்டறியும் பரிசோதனைகளை செய்து கொள்வது சிறந்தது. காரணம் பல பேர் தங்களுக்கு ரத்த கொதிப்பு இருப்பதையோ
நீரிழிவு இருப்பதையோ அறியாமலே இருக்கிறார்கள். கூடவே மறைந்து இதய நோயும் இருக்கலாம். எனவே தயவு கூர்ந்து வருடாந்திர பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இன்னும் உங்களின் குடும்பத்தில் தாய் தந்தை ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு இதய நோய் இருந்தாலோ அவர்களுக்கு இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்திருந்தாலோ தாங்கள் இன்னும் கவனத்துடன் இதயத்தைப் பேண வேண்டும்.
இறுதியாக எனது கருத்து.
ஜிம்களால் இதய நோய் வரும் வாய்ப்பு மட்டுப்படுமே அன்றி கூடுவதில்லை
ஆயினும் ஒருவருக்கு ஏற்கனவே இதய நோய் இருப்பின் அவர் அதை அறியாமல் அல்லது அறிந்தே அதைப் புறக்கணித்து தொடர்ந்து
இதயத்தின் வேலையைக் கூட்டும் உடற்பயிற்சிகளைச் செய்தால் இதயம் பாதிப்படையவே செய்யும்.
உங்கள் உடலுக்கு ஏற்ற உடற் பயிற்சியை
உரிய கவனத்துடன் தொடர்ந்து செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஜிம்களில் உடற்பயிற்சி செய்யும் போது இறந்த சொற்ப உயிர்களைப் பற்றியே அதிகம் பேச்சு வரும்.
ஆனால் இன்னும் அதிகமான உயிர்கள் வீட்டில் உறங்கும் வேளையில் சென்று கொண்டிருக்கின்றன.
அவற்றைப்பற்றி யாரும் பேச மாட்டோம்.
அச்சமின்றி தேகத்தை வலுப்படுத்துங்கள்.
உடலினை உறுதி செய்தால்
வாழ்வு வளம் பெறும்
By -- டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா