Nalam Hospital

Nalam Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nalam Hospital, Hospital, Palladam Road, T. kottampatti, Pollachi.

19/09/2025

மஞ்சள் காமாலை
அறிவோம்

மஞ்சள் காமாலையில் கண்கள் மஞ்சள் பூத்து சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறி நாளடைவில் உடல் முழுவதும் குறிப்பாக முகம் எலுமிச்சை நிறத்தில் மாறிப்போகும்

மஞ்சள் காமாலை என்பது நாம் நினைப்பது போல நோய் இல்லை மாறாக அது நோயின் அறிகுறியாகும்

நமது ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீம் எனும் இரும்பு மூலப் பொருள் சிதைவுண்டு அழியும் போது
இறுதியாக உண்டாகும் உயிர் வேதியியல் பொருள் - பிலிருபின் ஆகும்

இந்த பிலிருபின் ரத்தத்தில் உள்ள ஆல்புமினுடன் இணைந்து பயணித்து கல்லீரலை அடையும்

கரையாத தன்மை கொண்ட இணைவுறா பிலிருபினை கல்லீரல் தன்னகத்தே கொண்ட நொதியைக் கொண்டு இணைவுற்ற பிலிருபினாக மாற்றி அமைக்கிறது

நமது உடலைப் பொருத்தவரை
இணைவுறா பிலிருபினுக்கு இணைவுற்ற பிலிருபினை விட நச்சுத்தன்மை அதிகம்.

இணைவுற்ற பிலிருபின் கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்தில் அமிழ்த்தப்பட்டு நாம் கழிக்கும் மலத்தின் வழியாகவும் சிறுநீரின் வழியாகவும் வெளியேற்றப்படும்

இதனால் தான் மலத்தின் நிறமும் சிறுநீரின் நிறமும் மஞ்சள் நிறத்தில் உள்ளது

கல்லீரலுக்கு வந்து இணைவுறாத (Unconjugated Bilirubin ) நிலையில் இருக்கும் பிலிருபின் - மறைமுக பிலிருபின் (InDirect bilirubin) என்றழைக்கப்படும்

கல்லீரலில்
இணைவுற்ற பிலிருபின் (Conjugated bilirubin ) அல்லது நேரடி பிலிருபின் ( Direct Bilirubin) என்றழைக்கப்படும்.

அனைவரும் தவறாக நினைப்பது என்னவென்றால் மஞ்சள் காமாலை வந்து விட்டாலே அது கல்லீரலில் பிரச்சனையாகத் தான் இருக்கும் என்று.

ஆனால் அவ்வாறின்றி

மஞ்சள் காமாலை மூன்று விதமாக ஏற்படலாம்

முதல் வகை ( கல்லீரலுக்கு வருவதற்கு முன்பே இணைவுறா பிலிருபின் அதிகமாவது )
இதை PRE HEPATIC JAUNDICE என்கிறோம்

சிவப்பு அணுக்கள் சிதைவுற்று உற்பத்தி ஆகும் பிலிருபின் அளவுக்கு அதிகமாக உற்பத்தி ஆவதால் ஏற்படலாம்

- குருதி சிதைவுறுவதால் தோன்று ரத்த சோகை ( Hemolytic anemia)
- ரத்த கட்டிகள் (Hematoma) ஏற்பட்டு அங்கிருந்து ரத்த அணுக்கள் சிதைவுற்று பிலிருபின் அளவுகள் கூடலாம்

இந்த வகையில் இணைவுறா பிலிருபின் மட்டும் அதிகமாகும்.

இரண்டாவது வகை
கல்லீரலில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படுவது - இதை HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம்

கல்லீரலால் சரியான அளவில் பிலிருபினை கிரகிக்க இயலாமை
இது கில்பர்ட் சிண்ட்ரோம் என்ற மரபணு பிரச்சனையில் இருக்கும்.

பிலிருபின் இணைவுறும் வினையை சரியாக கல்லீரலினால் புரிய இயலாமையினால் ஏற்படுவது

இது கல்லீரலைத் தாக்கி நோய் உண்டாக்கும் வைரஸ்களான
ஹெப்பாடைடிஸ் - ஏ
ஹெப்பாடைடிஸ் - பி
ஹெப்பாடைடிஸ் - சி
தொற்று ஏற்படும் போதும்

சிரோசிஸ் எனும் கல்லீரல் சுருக்க நோய்

மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோய்

மது அருந்தாதவர்களில் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு படிதலால் ஏற்படும் அழற்சி போன்றவற்றில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அதனால்
இணைவுறாத பிலிருபினும் இணைவுற்ற பிலிருபினும் ஒரு சேர அதிகமாகும்.

மூன்றாவது வகை
கல்லீரலில் எந்த பிரச்சனையும் இருக்காது
ஆனால்
கல்லீரலை விட்டு பித்தத்துடன் வெளியேற்றப்படும் பிலிருபின் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் முறையாக வெளியேற இயலாமையால் ஏற்படும் மஞ்சள் காமாலை ஆகும். இதை Post HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம்

பித்தப் பை கற்கள் பித்த நீர் செல்லும் குழாயை அடைப்பது, ( choledocholithiasis)

புற்று நோய் கட்டி தோன்றி பித்த நீர் குழாயை அடைத்துக் கொள்வது, ( carcinoma)

குறுகிய & நீண்ட கால கணைய அழற்சி நோய் ( acute & chronic pancreatitis)

பித்த நீர் செல்லும் குழாய் குறுகிக் கொள்ளுதல் ( Strictures)

அஸ்காரிஸ் போன்ற புழுத் தொற்றுகள் ஏற்படுவதால் பித்த நீர் குழாயில் அடைப்பு ஏற்படுவது

மேற்சொன்ன மூன்று காரணங்களில் இரண்டாவது காரணத்தில் மட்டுமே கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதையும்

முதல் மற்றும் மூன்றாவது வகை காரணங்களுக்கும் கல்லீரலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறிய வைக்கவே இந்தப் பதிவு

நமதூர்களில் மஞ்சள் காமாலை என்ற அறிகுறி தோன்றிவிட்டாலே உடனே நாட்டு மருந்து சிகிச்சை எடுத்து விட்டு முறையான சிகிச்சைகளுக்கு வராமல் நாட்களைக் கடத்தும் போக்கு உள்ளதைக் காண முடிகிறது.

நவீன மருத்துவத்தில் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் போது அந்த அறிகுறி தோன்றியதற்கான மெய்யான காரணம் அறிந்து அதன் பிறகே சிகிச்சை அளிக்கப்படும்

மஞ்சள் காமாலை நான் முன்பே கூறிய மூன்று வகைகளுள் எந்த வகையை சேர்ந்தது என்பதை
முழு உடல் பரிசோதனை மற்றும் சில பரிசோதனைகள் செய்து கண்டறிய முடியும்.

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை என்பது வளர்ச்சி அடையாத கல்லீரலால் பிலிருபின் முழுமையாக இணைவுற இயலாமையால் ஏற்படுவதாகும்

அதே நேரத்தில் பிறவிக்குறைபாட்டாலோ
பிலிருபின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாலோ
ரத்த அணுக்கள் அதிகமாக சிதைவுறும் தன்மையாலோ மஞ்சள் காமாலை தோன்றலாம்.
அதற்கு முறையான ரத்த மாற்று சிகிச்சை செய்ய வேண்டும்.

சிறார் மற்றும் இளைய வயதில் ஹெப்படைடிஸ் ஏ தொற்றின் மூலம் கல்லீரல் பாதிக்கப்படுவதால் மஞ்சள் காமாலை தோன்றும்
எனினும் இன்ன பிற வைரஸ்களான ஹெப்படைடிஸ் பி, சி போன்றவை தொற்றை ஏற்படுத்தியிருக்கின்றனவா? என்பதை கட்டாயம் அறிய வேண்டும்.

காரணம் ஹெப்படைடிஸ் ஏ வுக்கு சிகிச்சை தேவையில்லை
ஆனால் பி மற்றும் சி உடனடியாக சிகிங்சை அளிக்கப்படவேண்டிய வைரஸ் தொற்றுகள் ஆகும்.

முதியவர்களில் மஞ்சள் காமாலை ஏற்படும் போது அது பித்தப்பை கற்கள், புற்று நோய் கட்டி , ஏதேனும் மருந்தின் பக்க விளைவாக இருக்கலாம்

மது அருந்துபவர்களிடத்தில் மதுவினால் ஏற்படும் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு அது முற்றும் போது மஞ்சள் காமாலை தோன்றும்

மேற்சொன்ன பல காரணங்களில் எது மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது என்பதை அறிந்து
சிகிச்சை அளிக்க வேண்டும்

குழந்தைகளிடத்தில் அதிலும் சிசுக்களில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தாமதம் செய்தால் உயிருக்கு ஆபத்தான நிலை உண்டாகி மரணம் சம்பவிக்கும்

பெரியவர்களிடத்திலும்
மஞ்சள் காமாலையின் உண்மையான காரணத்தை அறியாமல் தவறான சிகிச்சைகளை கொடுத்துக் கொண்டிருந்தால் பிலிருபின் விஷத்தன்மையை எட்டி மூளைக்கு ஏறி மரணம் சம்பவிக்கும்

இனியேனும் நம்மில் யாருக்கேனும் மஞ்சள் காமாலை தோன்றினால்
முறையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி
எந்த காரணத்தால் ஏற்பட்டது என்பதை அறிந்து
விரைவான முறையான சிகிச்சை பெறுவதே சிறந்த வழி

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்.

20/08/2025
17/07/2025

கால்களில் முள் தைத்து விட்டாலோ
ஆணி பாய்ந்து விட்டாலோ
விபத்து ஏற்பட்டு லேசான காயம் முதல் பெரிய ரத்தக் காயங்கள் ஏற்படும் போது

விவரம் தெரிந்த பெரியவர்களும் உற்றார் உறவினரும்
"அந்த செப்டிக் ஊசிய போட்டுட்டு வந்துரு"
என்றும்
"டிடி ஊசி போட்டாச்சா?" என்றும் வாஞ்சையுடன் விசாரிப்பதைப் பார்க்க முடியும்.

லேசான ரத்தக் காயம் ஏற்பட்டாலும்
டிடி ஊசி போட வேண்டும் சரி..
எதற்காக அந்த செப்டிக் / டிடி ஊசி போடப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

வாங்க பார்ப்போம்...

800 கோடி ஹோமோசேப்பியன்ஸ் ( நவீன மனிதர்கள்) இப்புவியில் மூன்று லட்சம் வருடங்களாக வாழ்கிறோம்.
ஆனால்
உலகம் தோன்றிய காலந்தொட்டு
முன் தோன்றிய முதல் மூத்தகுடிகள்
யாரென்று பார்த்தால்
நுண்ணியிரிகளான
பாக்டீரியா
வைரஸ்
பூஞ்சை ஆகியன என்பது ஹோமோசேப்பியன்களாகிய நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

பாக்டீரியாக்களில்
நல்லவர்களும் உண்டு
தீயவர்களும் உண்டு.

மனிதர்களுக்கு பேலியோலித்திக் காலம் தொட்டு தீது விளைவித்து வரும் பாக்டீரியாக்களை வகுத்தால் அதில்
முக்கியமானவையாக
"க்ளாஸ்ட்ரீடியம்" எனும் இந்தக் குடும்பம் வரும்.

க்ளாஸ்ட்ரீடியம் பெர்ஃப்ரிஞ்சன்ஸ்
க்ளாஸ்ட்ரீடியம் டெஃபிசில்
க்ளாஸ்ட்ரீடியம் பாட்டுலினம்
என இந்த பரம்பரையின் வகையறாக்கள் நமக்கு தீது மட்டுமே செய்து பழக்கப்பட்டவை.

அவற்றுள் முக்கியமான வகையறா தான்
"க்ளாஸ்ட்ரீடியம் டெட்டானி"
( Clostridium tetani)
இந்த வகை பாக்டீரியாக்கள்
நமது உடலுக்குள் புகுந்து நோய் உண்டாக்கும் போது
கடுமையான தசை இறுக்கத்தை ஏற்படுத்தி
தசைகளை முறுக்குவதால் "டெட்டானஸ்- தசை முறுக்கும் நோய்" என்று பெயரிடப்பட்டன.

தமிழில் இந்த நோய்க்கு
"இரண ஜன்னி" என்று பெயரிடப்பட்டுள்ளது

இரணம் = புண் / காயம்

ஆம்.. ஒரு காயமோ புண்ணோ ஏற்பட்ட பிறகு வரும் ஜன்னி = ஜுரம் = காய்ச்சல்
என்பதால் இந்த காரணப்பெயர் வந்தது.

க்ளாஸ்ட்ரீடியம் டெட்டானி பாக்டீரியா
உலகமெங்கும் கல் - மண் - புல் - முள் என்று சகலத்திலும் வியாபித்து இருக்கிறது.

வெளியுலகில் இருக்கும் போது
அதன் வித்திகளாக ( SPORES)
அமைதியாக உயிரற்றவை போன்று இருக்கும்.

மனிதர்கள்/விலங்குகளில் உடலுக்குள் சென்று தோதான வாகான சூழல் ஏற்பட்டதும் மீண்டும் உயிர்பெற்று
பல்கிப்பெருகி டெட்டானஸ் நோயை உண்டாக்கும்.

டெட்டானஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு
நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு
தசைகள் அனைத்தும் இறுக்கமடைகின்றன.

குறிப்பாக
தாடை இறுகக் கட்டிக் கொள்ளும். இதை "பூட்டப்பட்ட தாடை" என்று கூறுகிறோம்.
இதனால் எதையும் உண்ணவோ பருகவோ முடியாது.

நெஞ்சுப் பகுதி தசைகள் இறுக்கம் கண்டால் மூச்சு விட முடியாது.

இன்னும் நோய் தீவிரம் அடையும் போது
கழுத்து - முதுகு பகுதி தசைகள் அனைத்தும் ஒரு சேர தீவிரமாக இறுகிக்கொள்ள
வில் போல நோயாளி வளைந்து படுக்கையில் கிடப்பார்.

இத்தகைய கொடுமையான பிணியைச் சந்தித்து முறையான தீவிர உயர் சிகிச்சை வழங்காமல் விட்டால் மரணம் தழுவுவது திண்ணம்.

இத்தகைய கொடூரமான நோய் தற்போது
அரிதினும் அரிதாக மாறிவிட்டதற்கான முக்கிய காரணம்

இந்த ரணஜன்னிக்கு எதிரான தடுப்பூசிகள் நமது தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இலவச தடுப்பூசிகளாக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதே என்றால் அதில் எந்த மிகையுமில்லை.

குழந்தை பிறந்த
ஆறாவது வாரம் (PENTAVALENT 1)
பத்தாவது வாரம் ( PENTAVALENT 2)
பதினான்காம் வாரம் ( PENTAVALENT 3) என போடப்படும்
ஐந்து நோய்களைத் தடுக்கும்
பெண்டாவேலண்ட் ஊசியில் டெட்டானஸ் தடுப்பு மருந்தும் உள்ளது.

அதற்குப் பிறகு
முதல் பூஸ்டர்
16 முதல் 24 மாதங்களிலும் ( DPT-1

இரண்டாவது பூஸ்டர்
ஐந்து முதல் ஆறு வயதிலும் (DT-2)

அதற்குப் பிறகு
10 வயதிலும் ( TdaP1)
16 வயதிலும் (Tdap2)
இந்த ரணஜன்னிக்கு எதிரான தடுப்பூசியை
அரசு இலவசமாக மக்களுக்கு வழங்கி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு
அவர்களின் முதல் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே ஒரு மாத இடைவெளி விட்டு இருமுறை டெட்டானஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

காயம் ஏற்பட்டவுடன் உடனடியாக
காயம்பட்ட இடத்தை
போவிடோன் ஐயோடின் திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்து கல்/ மண் போன்றவற்றை நீக்கி விட்டு
உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெற வேண்டும்.

சாதாரண காயம் என்றோ
கல் / மண் போன்றவை பட்டு அசுத்தம் அடையாத காயம் என்றோ
முள் / ஆணி குத்தினாலும் ரத்தம் வராத காயம் என்றோ உதாசீனம் செய்யக்கூடாது.

மேற்கூறிய அனைத்துக்கும் டெட்டானஸ் ஷாட் வழங்கப்பட வேண்டும்.

டெட்டானஸ் அறிகுறிகள் தோன்றியவுடனே
தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் செய்யப்பட வேண்டும்.

உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி அதனுடன்
டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி முறிவு மருந்து ஆகியவை வழங்கப்படும்.
செயற்கை சுவாசக்கருவியில் பொருத்துதல். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்படும் தன்மை.
தசை இறுக்கத்தை சரிசெய்யும் தளர்வு மருந்துகள் என மூன்று முதல் நான்கு வாரங்கள் கடுமையான போராட்டம் நடக்கும்.

தற்போதைய சூழ்நிலையில்
செயற்கை சுவாச கருவிகள்,
தசை தளர்த்தி மருந்துகள்
டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதால்
இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

எனினும்,
எளிதான தடுப்பூசியால் தடுக்க முடிந்த ஒரு நோய் குறித்து விழிப்புணர்வு பெறாமல்
இருப்பது தவறு.

தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பின்
ஆறாவது வாரம்
பத்தாவது வாரம்
பதினான்காம் வாரம்

அதற்குப் பிறகு 16 முதல் 24 மாதங்கள்

அதற்குப் பின் ஐந்து முதல் ஆறு வயதுக்குள்

அதற்குப் பின் பத்து வயதிலும்
பதினாறு வயதிலும் டெட்டானஸ் தடுப்பூசியை வழங்குவதை உறுதி செய்யவும்.

காயம் சிறிதோ பெரிதோ
உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெறுவதை வழக்கமாகக் கொள்ளவும்.
ஏற்கனவே டிடி ஊசியை ஐந்து வருடங்களுக்குள் போட்டிருந்தால் தேவையில்லை. எப்போது போட்டோம் என்று சந்தேகம் இருப்பின் காயத்துக்கு பின்பு டிடி தடுப்பூசி பெறுவது நல்லது. அதனால் எந்த பாதகமும் இல்லை.

டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்த சிலருக்கு காயமுற்ற பின் டிடி ஊசி போடப்பட்டும் டெட்டானஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம்,
ஏற்கனவே முறையான பூஸ்டர் தடுப்பூசிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெறாமல் விட்டு, காயம் ஏற்பட்ட பின் தடுப்பூசி போட்டாலும்
அதற்குரிய எதிர்ப்பு சக்தி போதுமான அளவு வெளிப்படாமல் போவதால் டெட்டானஸ் கிருமி வென்று விடுகிறது.

இது போன்ற சூழ்நிலையை கருத்தில்
கொண்டு தயவு கூர்ந்து
நமது பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்த
முதல் வருட தடுப்பூசிகளை சிறப்பாக சரியாக வழங்கும் நாம்..

அவர்களின் ஐந்தாவது வயது (DT) , பத்தாவது வயது, பதினாறாம் வயது அதற்குப் பிறகு பத்து வருடம் ஒருமுறை டெட்டானஸ் தடுப்பூசிகளையும் சரியாக வழங்கிடுவோம் என்று உறுதி ஏற்போம்

டெட்டானஸை முற்றிலுமாக ஒழிப்போம்

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் .

13/07/2025

சமீபத்தில் நண்பர் ஒருவர்
இதை ஒத்த சந்தேகம் கேட்டிருந்தார்
மாஸ்டர் ஹெல்த் செக் அப் முடித்து விட்டு
சிறுநீரக செயல்பாடு குறைபாடு இருக்கவே
நெஃப்ராலஜிஸ்ட் ( சிறுநீரக சிறப்பு நிபுணர்) அவரை அதிகப்படியாக நீர் அருந்த வேண்டாம் என்றும் தினம் பருகும் நீரைக் கட்டுப்பாடுடன் பருக அறிவுறுத்தியிருக்கிறார்.

அதற்கடுத்து குடல் நோய் சிறப்பு நிபுணரின் ஆலோசனையை அவர் மலச்சிக்கலுக்காக பெறும் போது அதிகமாக நீர் அருந்துங்கள் என்றும் அதன் மூலம் மலச்சிக்கல் குணமாகும் என்று அவர் அறிவுரை பகிர்ந்ததாகப் பதிவு செய்து

மருத்துவர்களுக்குள் ஏன் இந்த முரண்
ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மாதிரி நேர் எதிர் அறிவுரைகளைக் கொடுத்தால்
நோயர்கள் குழப்பமடைய மாட்டார்களா?
என்று நியாயமான கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதே போன்று பல இடங்களில் சிக்கல் ஏற்படும்...

உடல் எடை குறைப்பு / நீரிழிவு நோய் சிறப்பு நிபுணர்
தினசரி நான்கு கிலோமீட்டர் நடப்பது உடல் எடை குறைப்பதற்கு நல்லது என்று கூறியிருப்பார்

ஆனால் எலும்பியல் சிறப்பு நிபுணர்
மூட்டுத் தேய்மானம் காரணமாக அதிகம் நடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பார்.

பொது மருத்துவர் - விட்டமின் டி பெறுவதற்கு வெயிலில் சற்று நேரம் நிற்பது நல்லது என்றிருப்பார்.

தோல் மருத்துவத்துக்கு சிகிச்சை செல்லும் போது தோல் மருத்துவர் - வெயில் மேலே படுவதால் அலர்ஜி வருகிறது எனவே நேரடி வெயிலை தவிர்க்கவும் என்பார்.

இத்தகைய "முரண்கள்" மருத்துவ சிகிச்சையில்
இயல்பானவையே
இயற்கையானவையே.

இவற்றை இனங்கண்டு களைவது
என்பது மிகவும் எளிதானது.

இதற்கு மருத்துவ அறிவில் நுண்புலம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதோ மேற்கூறிய மூன்று நிகழ்வுகளிலும் எப்படி தெளிவு பெற வேண்டும் என்று கூறுகிறேன்

பொதுவாக
மருத்துவத் துறையைப் பொருத்தவரை

எம்பிபிஎஸ் பயின்ற மருத்துவர்களுக்கு அவர்கள் பயிலும் போது கூறப்படும் விஷயம்
" உங்களுக்கு மருத்துவத் துறை சார்ந்த அனைத்தைப் பற்றியும் அடிப்படை அறிவு இருக்க வேண்டும்"(SOMETHING ABOUT EVERYTHING) "

எம்டி / எம்எஸ் (MD/MS) பட்டமேற்படிப்புகளில் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதைப் பற்றி அக்குவேறு ஆணிவேராகப் படித்து பட்டம் பெறுகிறோம்.
இது அந்தத் துறை பற்றி அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என்ற நிலையில் வருகிறது ( EVERYTHING ABOUT SOMETHING)"

எம்சிஹெச்/ டி எம் உள்ளிட்ட சிறப்பு பட்டமேற்படிப்பு பயின்றவர்கள்
குறிப்பிட்ட துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட அம்சத்தைப் பற்றி இன்னும் ஆழமாக அறிவர். இது ( EVERYTHING ABOUT SOMEINTHING INSIDE THAT SOMETHING )

எனவே,
சிறப்பு பட்ட மேற்படிப்பு பயின்ற மருத்துவர்
"சிறுநீரகம்" குறித்து மட்டுமே அறிவுரை கூறுவார். அதற்குக் காரணம்
அவர் தொடர்ந்து சிறுநீரகங்கள் சார்ந்த நோய்கள் , நோயாளிகளைச் சந்தித்து அனுபவத்தையும் அறிவையும் வளர்த்துக் கொள்கிறார்.

"குடல்" சார்ந்த பட்டமேற்படிப்பு பயின்றவர்
அதற்குரிய அறிவுரைகளை அவர் சார்ந்த உறுப்பு சார்ந்த அறிவுரையை வழங்குவது சரியானதே.

நுண்ணோக்கி கொண்டு ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும்

தொலைநோக்கி கொண்டு ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது.

நுண்ணோக்கி கொண்டு பார்க்கும் போது
அருகில் உள்ள நுண் பொருளும் பெரிதாகத் தெரியும்

தொலைநோக்கி தூரத்தில் உள்ள பொருளை அருகில் காட்டும்.

இப்போது
முதல் நிகழ்வுக்கு வருவோம்

சிறுநீரக செயல்பாடு குறைகிறது
என்பதால் நீர் குறைத்து அருந்த வேண்டும் என்று சிறுநீரக சிறப்பு நிபுணர்

மலச்சிக்கல் காரணமாக நீரை அதிகமாக அருந்தலாம் என்கிறார் குடல்நோய் சிறப்பு நிபுணர்.

இருவரும் இருவேறு எதிர் எதிர் கருத்துகளைக் கூறியிருந்தாலும்
நோயாளி எளிதில் இந்த விஷயத்தில் அறிவார்ந்த ஒரு முடிவுக்கு வர முடியும்.

அதாவது உள்ளுறுப்புகளில் முக்கியமானதாக இருக்கும் சிறுநீரகம் சுமை தாங்க இயலாமல் இருக்கிறது எனவே நாம் சிறுநீரக நிபுணர் கூறிய அறிவுரையை ஏற்க வேண்டும்.

குடல் நோய் நிபுணரிடம் இதனை எடுத்துக் கூறி , சிறுநீரக மருத்துவர் நீர் அதிகம் அருந்தக் கூடாது என்று கூறியிருக்கிறார் என்பதை எடுத்துக் கூறினால்
மலச்சிக்கலுக்குரிய அடுத்த சிகிச்சைகளை பரிந்துரைப்பார்.

ஒரு மருத்துவர் நன்றாக நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்று கூறினால்
எலும்பு மருத்துவர் மூட்டுத் தேய்மானம் இருப்பதைக் கூறியிருப்பதை எடுத்துக் கூறி தன்னை நடக்கக் கூடாது என்று அவர் அறிவுரை கூறியிருப்பதை எடுத்துக் கூறி மாற்று சிகிச்சையைப் பெற வேண்டும்.

வெயிலில் நின்றால் விட்டமின் டி கிடைக்கும் என்பது பொதுவான அறிவுரை
ஆனால் தான் வெயிலில் இருந்தால் அலர்ஜி வருவதும் அதற்கு சரும நோய் நிபுணர் வெயிலில் நிற்கக் வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பதை
மருத்துவரிடம் கூறினால் விட்டமின் டி சப்லிமெண்ட்ஸ் வழங்குவார்

என்னைப் பொருத்தவரை
அந்தந்த உறுப்புகள்
அந்தந்த உடல் இயக்க மண்டலங்களுக்கான சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை முறைகளை
ஒருங்கிணைத்து ஒன்றுடன் மற்றொன்று
முரண்படாமல் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்து சிகிச்சை பெறுவது
நோயரின் பொறுப்பாகும்.

அதை நோயர் சரிவரச் செய்ய இயலாமல் இருக்கும் நிலையில், மருத்துவத் துறையில் அனைத்து துறைகள் பற்றியும் அடிப்படை ஞானம் கொண்ட
குடும்ப நல மருத்துவர்
இத்தகைய பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் தரும் சிகிச்சையை ஒருங்கிணைத்து ஒன்றுக்கொன்று முரண்படாத கடைபிடிக்கத்தக்க அறிவுரைகளை வழங்கும் பணியைச் செய்யலாம்.

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் .

Food matters!!
18/06/2025

Food matters!!

தற்சமயம் சீனாவில் பரவி வரும் ஹெச் எம் பி வி எனும் வைரஸ் தொற்று குறித்து அனைவரும் அச்சத்துடன் பகிர்ந்து வருவதைக் காண முடி...
03/01/2025

தற்சமயம் சீனாவில்
பரவி வரும் ஹெச் எம் பி வி எனும் வைரஸ் தொற்று குறித்து அனைவரும் அச்சத்துடன் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.

2019இல் சீனாவின் வூஹான் நகரில் இருந்து புதிய கொரோனா வைரஸ் 2019 உருவெடுத்து உலகம் முழுவதும் பரவி அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றாக மாறி உலகை ஆட்டுவித்தது.
பல லட்சம் உயிர்கள் இறக்கக் காரணமாகவும் அமைந்தது.

அப்போதிருந்து
நம் அனைவருக்கும்

சீனா என்றாலோ
சீனாவில் சுவாசப் பாதை தொற்றுப் பரவல் நிகழும் எக்ஸ் தள காணொளிகள் வருடா வருடம் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பரவும். பிறகு அடங்கும்.

இது கொரோனா தொற்று மீது நம் அனைவருக்கும் இருக்கும் போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் ஆகும். அதாவது
மீண்டும் ஒருமுறை கொரோனா போன்ற தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பதட்டம் நமக்குள் வந்து விடும்.

இதனால் சீனா குறித்து எந்த செய்தி வந்தாலும் அது வைரல் ஆகிவிடுகிறது.

சரி வாருங்கள்
இப்போதைய ஹெச் எம் பி வி விஷயத்துக்கு வருவோம்.

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்பது மனிதர்களுக்குப் புதிய வைரஸ் அன்று.
இது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் துவங்கிய புதிய கொரோனா வைரஸ் போன்று மனிதர்களுக்குப் புதிய வைரஸ் அன்று.

ஏற்கனவே பல பத்து ஆண்டுகளாக நம்மிடையே இந்த வைரஸ் சுற்றி சுற்றி தொற்றுகளை ஏற்படுத்தி வரும் வைரஸ் தான் என்பதால் நம்மில் பெரும்பான்மையினருக்கு இந்தத் தொற்றுக்கு எதிரான சிறிய அளவு எதிர்ப்பு சக்தியேனும் இருக்கும்.


பல பத்து வருடங்கள் நமது மனிதர்களிடையே சுற்றில் இருந்தாலும்
இந்த வைரஸ் 2001 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் ஆய்வகத்தில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

கொரோனா போன்றே இதுவும் ஒரு ஆர் என் ஏ வைரஸ் ஆகும்.
நியூமோ வைரிடே எனும் சுவாசப்பாதையைத் தாக்கும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

இது தற்போது வரை
இரண்டு வகைகளாக உருமாற்றம் அடைந்துள்ளது

ஏ மற்றும் பி வகை.

இந்த வைரஸ் - குளிர்காலங்களில் பரவும்
பல்வேறு வகை சுவாசப்பாதை தொற்றுகளான

- ஆர் எஸ் வி
- இன்ஃப்ளூயன்சா வைரஸ்
- ரைனோ வைரஸ்
- அடினோ வைரஸ்
- பேரா இன்ஃப்ளூயன்சா வைரஸ்
- கொரோனா வைரஸ்
ஆகிய பல வைரஸ்களுள் ஒன்று தான்.
இது பெரும்பான்மை மக்களுக்கு தனிப்பட்ட அச்சுறுத்தல் தரக்கூடிய பெரிய பிரச்சனைக்குரிய வைரஸ் அன்று.

இந்த வைரஸ் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் வயதினர்
- ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.

வீசிங் மற்றும் வலிப்பு உள்ள குழந்தைகளுக்கு அதிகம் இந்தத் தொற்று ஏற்படுகிறது.

பெரும்பான்மையினருக்கு
சாதாரண சுவாசப்பாதை தொற்றாகக் கடந்து செல்லும்.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள்
வீசிங் இருக்கும் குழந்தைகள் ஆகியோருக்கு நுரையீரலில் தீவிர தொற்று ஏற்படலாம்.

- முதியோர்கள்
- புற்றுநோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள்
- எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்றவர்கள்
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்
- எதிர்ப்பு சக்தி குன்றியோர்
ஆகியோருக்கு சற்று தீவிரத்துடன் தொற்று வெளிப்படலாம்.

இந்தியாவைப் பொருத்தவரை
இந்தத் தொற்றுப் பரவல்
- குளிர் காலங்களில் அதிகம் நிகழ்கிறது.

சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில்
கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றில் ஐந்து வயதை நிறைவு செய்தோரில்
4% ஹெச்.எம்.பி.வி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் இந்தத் தொற்று புதிதன்று.

அறிகுறிகளைப் பொருத்தவரை

காய்ச்சல்
சளி இருமல்
மூக்கு ஒழுகுதல்
மூக்கடைப்பு
போன்ற சாதாரண அறிகுறிகள் மட்டுமே வந்து நோய் குணமடையும்

எனினும்
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும்
முதியவர்களுக்கும் ஏற்கனவே ஹைரிஸ்க் என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கும்
- நியூமோனியா தீவிரமான நுரையீரல் தொற்று நிலை ஏற்படும்

இதன் அறிகுறிகள்
- மூச்சுத் திணறல்
- மூச்சு விடுவதில் சிரமம்
- நடக்கும் போது தலை சுற்றல்
- உள்ளங்கை பாதம் நீல நிறத்தில் மாறுதல்
- குழந்தைகளின் நெஞ்சுப் பகுதி உள்ளிளுத்து மூச்சு விடுதல்
- குழந்தை மூச்சு விடும் போது குறட்டை போன்ற சத்தம் கேட்பது
போன்றவை அபாய அறிகுறிகளாகும்.

சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடையே
வைரஸினால் உண்டான நுரையீரல் தொற்றுக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆன நோயாளிகளுள் 8.5% ஹெச்எம்பிவி தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
அவர்களுள் 80% பேருக்கு வீசிங் இருந்தது.
12% பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்தத் தொற்று ஏனைய சுவாசப்பாதை தொற்றுகள் போலவே

இருமுவது
தும்முவது மூலம் சளித்துகள்கள் காற்றில் பறந்து அதை நுகருபவர்களுக்குப் பரவுகிறது.

கண்ட இடங்களில் கை வைப்பதன் மூலம் கையில் தொற்று பட்டு அதை மூக்கிலும் வாயிலும் வைப்பதன் மூலம் பரவுகிறது.

எனவே,
பொதுவாக குளிர் காலங்களில்
வெளியே செல்லும் போது
முகக்கவசம் அணிந்து செல்லுவது நல்லது.

கைகளை அடிக்கடி சோப் போட்டுக் கழுவுவது நல்லது.

கைகளை கண்ட இடங்களில் வைக்காமல் இருப்பது இன்னும் நல்லது.

இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான பிரத்யேக முறிவு மருந்து இல்லாவிடினும்
ரிபாவிரின் எனும் வைரஸ் கொல்லி மருந்து சிறப்பாக வேலை செய்கிறது.

தீவிரமான அளவு மரணங்களை விளைவிக்கக்கூடியதாக இல்லை என்பதால்
இதற்கென பிரத்யேக தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில்
இந்த வைரஸ் ஏனைய சுவாசப் பாதை வைரஸ்கள் போன்றே அதன் நோய் தன்மையில் உள்ளது.

கொரோனா போன்ற பெருந்தொற்று நிலையை இந்த வைரஸ் உண்டாக்கும் வாய்ப்பு இப்போதைக்கு மிக மிகக் குறைவு.

எனவே இந்த வைரஸ் விசித்திரமானது என்றோ
பயங்கரமானது என்றோ அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இதுவும் கடந்து போகும்.

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Address

Palladam Road, T. Kottampatti
Pollachi
642002

Telephone

+917397164930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalam Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nalam Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category