11/10/2020
அக்டோபர் 12: உலக மூட்டழற்சி நாள்
நிற்க, நடக்க, அமர, எழுத, படிக்க, திரும்ப எனப் பல்வேறு செயல்களுக்கும் மூட்டுகள் மிகவும் அவசியம். மூட்டுகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் நம்முடைய வேலைகள் எல்லாமே முடங்கி விடும்.
உலகெங்கும் பல கோடி மக்கள் பல்வேறு மூட்டழற்சி, மூட்டுவாத நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வீக்கம், வலி, வேதனை, அவற்றை நீட்ட, மடக்க இயலாமை ஆகியவையே இந்த நோய்களின் தொந்தரவுகளாக இருக்கும். இந்தத் தொந்தரவுகள் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே வரும். இவை முடக்கு வாதம், கீல் வாதம், மூட்டு வாதம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வயதாக, வயதாக மூட்டு வாத நோய்கள் அதிகரிக்கும்.
முக்கிய வகைகள்
# கீல்வாதம் # முடக்கு வாதம் # பல்வேறு துகள்கள் / பொருட்கள் படிவதால் ஏற்படும் மூட்டழற்சி, # சோரியாசிஸ் மூட்டு வாதம். # தொற்று நோய்க்கிருமிகளால் ஏற்படும் மூட்டழற்சி, # மூட்டு வாத நோய்களில் மூட்டு மட்டுமல்ல, பல்வேறு தசை, தசைநார், மூட்டுகளின் சவ்வு, இணைப்பு திசு நோய்களும் அடங்கும்.
கீல்வாதம் (Osteoarthritis)
இது முதியவர்களைப் பெரிதும் பாதிக்கும். மூட்டுகள் அமைந்திருக்கும் இடத்திலுள்ள குருத்தெலும்புகள் சிதைவதால் அங்குள்ள எலும்புப் பகுதிகளில் உராய்வு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய எலும்பு தோன்றும். இதனால் இரண்டு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி குறுகிவிடும். இந்த வகை மூட்டுப்பாதிப்பு பெரும்பாலும் கை, முழங்கால், இடுப்பு, முதுகெலும்பு ஆகியவற்றைப் பாதிக்கும். மூட்டுகளின் உட்பகுதி நலிவடைவதால் ஏற்படும் மூட்டழற்சி, மூட்டுத் தேய்மான பாதிப்பால் ஏற்படும் மூட்டு வாதம்.
முடக்கு வாதம் (Rheumatoid arthritis)
உடல் எதிர்ப்பாற்றல் புரதங்களால் மூட்டு பாதிக்கப்படுவதால் இத்தகைய வாதம் ஏற்படுகிறது. இந்த நோய் மூட்டுகளை மட்டும் பாதிப்பதில்லை. நுரையீரல், கண், சருமம், இதயம், ரத்த நாளங்கள், நரம்பு என உடலின் பல்வேறு பகுதிகளையும் பாதிக்கும். வலது, இடது என இரண்டு கை, மணிக்கட்டு, முழங்கால் மூட்டுகள் ஒரே நேரத்தில் இதனால் பாதிக்கப்படலாம். வலி குறிப்பாக, காலை வேளைகளில் அதிகமாக இருக்கும். மூட்டிலுள்ள சவ்வும் பாதிக்கப்படும்.