25/10/2017
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு நோய் அதிகம், கடுமையாக பாதிக்கும். இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் வருகிறது. ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரசுக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்ற வகை வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை வராது.
எப்படி பரவுகிறது?
ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) எனும் உடலில் கோடுகள் உள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த கொசு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, மற்றவர்களுக்கு பரப்புகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த கொசு மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள்,பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளியிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது.நோயாளியிடம் இருந்து,கொசுக்குள் போய் பின்னர்தான் அடுத்தவர்களுக்கு பரவும். நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் மூலம் பரவாது.
டெங்கு அறிகுறிகள்
கொசு கடித்து நோய் வர 5 முதல் 15 நாள் வரை ஆகும். ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டு வலி போன்றவை வந்து சில மணி நேரத்தில் வரும். காய்ச்சல் 104 பாரன்ஹீட் வரை போகலாம். நாடித்துடிப்பு குறைதல், ரத்த அழுத்தம் குறைதல் போன்றவை ஏற்படும். கண்கள் சிவக்கும், உடலில் தோலின் நிறம் மாறும்.
சித்த வைத்திய முறை
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது, மாதுளை பழ சாறு உடலின் ரத்த எண்ணிக்கையேய் அதிகரிக்க உதவும். எனவே இவைகள் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும்.
தயாரிப்பது எப்படி?
பப்பாளி இலை சாறு: புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். பப்பாளி இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் உடலில் உள்ள நோயை தடுக்கவும் முடிகிறது. பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மலைவேம்பு இலைச்சாறு
புதிதாக பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது. நிலவேம்புக் குடிநீர்நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான அளவு தண்ணீர் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும். வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் மருந்து கடைகளில் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி மேற்கண்ட முறையில் தயார் செய்தும் அருந்தலாம். நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்துவிடும்.
மேற்கண்ட சாறுகளையும் குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் தணிந்த பிறகு மேலும் 2நாட்களுக்கு அருந்தி காய்ச்சலின் தாக்கத்தை தடுத்துவிடலாம்.
மாதுளை பழ சாறு
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மாதுளம்பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.
பித்தத்தைப் போக்கி, இருமலை நிறுத்துகிறது.புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. வயிற்றுக்குள் ஏற்படும் தொந்தரவுகளை நீக்குகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் ரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலவீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும்.
காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.