15/11/2019
November 14th World Diabetes Day
சீனி (சக்கரை) வியாதி பற்றி ஒரு நீதி கதை சொல்லவா சார்? By Dr Ziyad Aia
கடலில் ஒரு படகு மிதந்து கொண்டு இருந்தது. படகு சரியாக பராமரிக்கப்படாததால் அப்படகின் அடிப்பகுதியில் சிறிய துளை ஒன்று ஏற்பட்டுவிட்டது. மாலுமி அதை கவனிக்கவும் இல்லை. அப்படி ஓட்டை வரக்கூடிய சாத்தியம் இருந்தும் அதனை சோதிக்கவும் இல்லை.நேரம் செல்ல செல்ல படகுக்குள் நீர் நிரம்ப தொடங்கியது. நீர் கால்களை நனைத்த பின்தான் படகின் ஓட்டை மாலுமிக்கு விளங்கியது.
என்ன செய்யலாம் என சிந்திக்கலானான். எல்லோரும் செய்யும் வழிமுறையான ஒரு வாளியால் படக்கினுள் நீர் நிரம்பும்போது இறைத்தான். சிறிது நேரம் செல்ல மீண்டும் இறைத்தான்.நேரம் செல்ல செல்ல ஓட்டையும் பெரிதாகிக்கொண்டே சென்றது. இரண்டு மூன்று வாளிகள் கொண்டு வேகமாக இறைக்க ஆரம்பித்தான்.
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. இனி வாளியால் இறைப்பது போதாது என்பதை உணர்ந்த அவன் இயந்திர மோட்டார் கொண்டு இறைக்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில் மோட்டர் தண்ணீர் உள்நுளையும் வேகத்துக்கு நீரை இறைத்தது. (சில நேரம் அதை விட கூட இறைக்க முட்பட்டபோது motor இன் வேகத்தை குறைக்க வேண்டியும் ஏட்பட்டது.) ஒரு நிலைமைக்கு மேல் ஓட்டை இன்னும் பெரிதாக நீர் அதிகமாக வர மோட்டரினாலும் இறைக்க முடியவில்லை. கடைசியில் கப்பல் மூழ்கியே போனது.
இங்கு படகு தான் மனித வாழ்க்கை.
வாளி என்பது சீனிக்கு (சக்கரை) எதிரான மாத்திரைகள்.
மோட்டர் என்பது சீனி (சக்கரை) க்காக போடும் இன்சுலின்.
இக்கதையின் நீதி:-
சீனிக்காக கொடுக்கும் மருந்துகள் Control படுத்துமே தவிர (ஓட்டையை அடைக்காது) குணப்படுத்தாது.
“ANTI DIABETICS ONLY CONTROLS. NEVER CURE.”
SO, இங்கு ஓட்டை விழாமல் தடுப்பது அல்லது ஓட்டையை அடைப்பது எப்படி?
ஓட்டையை அடைப்பது வைத்தியரின் கையிலோ மருந்துகளிலோ இல்லை. எமது கைகளிலேயே உள்ளது.
ஆரம்பத்திலேயே வாழ்க்கை எனும் படகில் ஓட்டை விழுவதற்கான சாத்தியம் உள்ளதா என முன்கூட்டியே சோதித்தல். காரணிகளை இனங்கண்டு அவற்றை கட்டுப்படுத்தல். ஓட்டை விழ பிரதான காரணிகள் சில:-
01. உணவு பழக்க வழக்கம் / கட்டுப்பாடு:-
இருபது வருடங்களுக்கு முன்னர் நாம் உண்ட உணவுகள் என்ன? இப்போது உண்ணும் உணவுகள் என்ன?
எத்தனை வீடுகளில் காலை உணவு சமைக்கப்படுகிறது?
இயந்திர வாழ்க்கை சமைக்க நேரம் இல்லை. தின்ன நேரமில்லை.
தின்னும் உணவுகள் தேவைக்கு அதிகம். அதிக கலோரி , அதிக மாச்சத்து (அரிசி, கோதுமை சுவைஊட்டிகளாலும், Processed உணவுகளாகவும் அதிகளவில் உட்கொள்ளல்.) . உண்ட உணவு எரிந்து வெளியேற உடற்பயிற்சி இல்லை.
02. உடற்பயிற்சி இன்மை:-
தொழில்நுட்பம் வளர்ந்து வாகனங்களும் அதிகரித்ததால் மனிதனுக்கு உடற்பயிற்சியே இல்லை.
முஸ்லிம்களை பொறுத்தவரையில் பெரும்பாலானோருக்கு அதிகபட்ச உடற்பயிற்சியே தொழுகை தான்.
50 வயது தாண்டிய எத்தனை பேருக்கு குந்தி வுழூ செய்ய முடியும்? எத்தனை பேருக்கு நின்று தொழ முடியும்?
இப்போது எந்த பள்ளிகளிலாவது தரையில் ஹவ்லு (நீர் தடாகம்) கட்டுப்படுகிறதா? அதற்கு பதிலீடாக Tap தண்ணீர். இல்லையேல் ஹவ்லுவையே இடுப்புக்கு மேலே உயர்த்தி விட்டோம். பலருக்கு கால் கட்டை விரலை குனிந்து தொட முடியாது.
பலருக்கு ஆக கூடிய உடல் அசைவு நடப்பது தான். அதற்கும் இப்போது இயந்திரங்கள் ஆக்கிரமித்து அதையும் இல்லாமல் ஆக்கிக்கொண்டு வருகிறார்கள்.
03. மன அழுத்தம் / Mental Stress:-
இது மிக முக்கியமான ஒரு பிரச்சினை. பலர் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு செய்தும் சர்க்கரை நோய் குணமாகாமல் இருக்க இதுவும் ஒரு காரணம். அதிக வேலை, ஓய்வு இன்மை, கிடைக்கும் ஓய்வு நேரகிங்களிலும் சமூக வலைத்தளங்களில் Chatting, விவாதித்தல் என காலம் கழிகிறது. இப்போது பலருக்கு மன அழுத்தத்துக்கு காரணமாய் அமைவது சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் என்ற பெயரில் வாக்குவாதப்படுவதும் அதன் ஊடாக ஏற்படும் உள அழுத்தமும்.
பல பெண்கள் தொடர் நாடகங்களுக்கு அடிமையாகி அதில் வரும் காட்சிகளோடு ஒன்றித்து உணர்ச்சிவசப்படுதல், மன அழுத்தத்துக்கு உள்ளதால் என பல வழிகளில் இது ஏற்படுகிறது.
இன்சுலின் சுரப்பு ஓமோன் கட்டுப்பாட்டில் உள்ளது. (பசி வந்தால் உமிழ் நீர் சுரக்கும் பயம் வந்தால் வாய் வரண்டு போகும். இது போன்றதே).
பலருக்கு சீனி வியாதி இருப்பது தேரிந்தாலே, தன்னை ஒரு நோயாளி என்று கருதி இன்னும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். (நஞ்சுள்ள) நல்ல பாம்பு கடித்து பிளைத்தவனும் இருக்கிறான். ( நஞ்சற்ற) தண்ணி பாம்பு கடித்து செத்தவனும் இருக்கிறான். பயம், மன அழுத்தமே மரணத்தை தரலாம்.
இயந்திர மயமாகியுள்ள Generation மிக முக்கியமாக இக்காலத்தில் சீனி வியாதி அதிகரிக்க பிரதான காரணம். Generation Gap ஐ ஒரே வசனத்தில் விளங்குவதானால்
“எனது தந்தை 50 ரூபாயை மீதம் பிடிக்க 30 நிமிடம் நடந்து சென்றார்.
நான் 30 நிமிடத்தை மீதம் பிடிக்க 50 ரூபாயை செலவு செய்து Auto வில் செல்கிறேன்.”
எப்போ பாரு வெளியிலேயே விளையாடிக்கொண்டு இருக்கிறாய் எனறு பிள்ளையை வீட்டுக்கு அழைத்து வந்த காலம் போய், எப்போ பாரு வீட்டிலேயே Phone, TV game வெளியே போய் விளையாடு! என்று பிள்ளையை பெற்றோர் விரட்டும் காலம்.
இது இப்படி இருக்க சிலர் கூறும் கதை சீனி நோய் ஒரு வியாபாரம். ஏனைய நோய்களை குணப்படுத்திய அலோபதியால் சீனியை குணப்படுத்த முடியவில்லை என்ற ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். இதற்கு மேலே கூறிய கதையை சரியாக விளங்கினால் விடை கிடைக்கும். உடலில் தொற்றிய ஒரு நோய்க் கிருமியால் காய்ச்சல், நியூமோனியா போன்ற நோய்கள் ஏட்பட்டால் அதற்கு எதிரான மாத்திரைகளை சாப்பிட்டால் அந்த நோய் கிருமி அழிய நோய் குணமாகிவிடும்.
ஆனால் சக்கரை / சீனி நோய் என்பது உண்மையில் சமிபாட்டு குறைபாடு (Metabolic Syndrome)
நோய் கிருமியை அழிப்பதுபோல் சக்கரை / சீனி நோயை அழிப்பது என்பது கடலில் கப்பல் மூழ்காமல் இருக்க கடலையே வற்ற வைப்பது போன்றது. உண்ணல் , உறங்கள் , உளஅழுத்தம் என்பது எந்த நாளும் ஏட்படுவது. அதை சரியான முறையில் பேணுவது சக்கரை / சீனி நோய் வராமலும் வந்ததை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவும்.
இன்னும் சிலர் தொடர்ந்து மருந்து குடித்து வந்தும் சக்கரை நோயினால் காலை இழத்தல், கண் பார்வை பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறதுதானே என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இக்கதை சமர்ப்பணம். மருந்துகள் கதையில் வரும் நீரிறைக்கும் வாளியை போன்றது. அது கப்பல் விரைவாக அமிழ்ந்து விடாமல் கட்டுப்படுத்தி கப்பலை நீண்ட காலம் மிதக்க செய்கிறது.
நோய் அறிகுறிகள் தோன்றவில்லை என்று கட்டுப்பாடு , மருத்துகள் இல்லாமல் இருந்தால் சக்கரை / சீனி நோயின் விளைவுகளை விரைவிலேயே அனுபவிக்க நேரிடும்.
மனதை திட படுத்தி போராடினால் சீனி வியாதியை வெல்லலாம்.
TAKE HOME MESSAGE:-
மருந்து மாத்திரைகள் சீனி (சக்கரை) நோயை கட்டுப்படுத்துமே தவிர குணப்படுத்தாது.
குணப்படுத்துவது எமது கைகளிலேயே உள்ளது.
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பதே பிரதான வழிமுறைகள்.
“நம்மில் பலர் படகின் ஓட்டையை அடைப்பதை விட்டுவிட்டு நீரை இறைப்பதிலேயே குறியாய் இருக்கிறோம்.சிலர் ஓட்டையை அடிப்பதும் இல்லை. நீரை இறைப்பதும் இல்லை.”
(விரிவஞ்சி சக்கரை / சீனிக்குரிய ஏனைய காரணிகள் மற்றும் Type 1 Diabetes பற்றி குறிப்பிடவில்லை.)
எண்ணமும் எழுத்தும் Dr Ziyad Aia
http://www.lankahealthtamil.com/சீனி-சக்கரை-வியாதி-பற்றி/