12/03/2023
டொக்டர் 2-3 மாசமா தூரத்தில இருக்கிறது தெரியுதில்ல
எதாவது வருத்தம் இருக்கா? கிளினிக் போறிங்களா?
சீனி வருத்தம் 2 வருசமா இருக்கு ஆனா இப்ப கிளினிக் போற இல்ல. சாப்பாட்டால கொன்ட்ரோல் பண்ணுறன் அதோட ஆயுர்வேத மருந்தும் பாவிக்கன்.
ஏன் கிளினிக் போகல்ல
சீனி வருத்தத்திற்கு குளிசை பாவிச்சா கிட்னி பழுதாகிருமாம்
பொதுவாக மக்களிடம் ஒரு தப்பான அபிப்பிராயம் பரப்பட்டுக் காணப்படுகிறது அதாவது நீரிழிவு (Diabetes) நோய்க்கு பயன்படுத்தப்படும் குளிசைகளினால் குறிப்பாக மெற்போர்மினால் சிறுநீரகத்தினுடைய தொழிற்பாடு பாதிப்படையும்.
நீரிழிவு நோயாளர்களுக்கு ஆரம்பக்கட்ட மாத்திரைகளாக மெற்போர்மின் குளிசைகளே வழங்கப்படும்.
மெற்போர்மின் பாவிக்கின்ற ஒருவர் ஒழுங்காக உரிய நேரத்திற்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தடவைகள் குளிசைகளை பாவிக்காமல் விட்டால் உடலிலுள்ள சீனியின் அளவு தொடர்ச்சியாக அதிகரித்து சிறுநீரகத்தினுடைய தொழிற்பாடு படிப்படியாக பாதிப்படையும். ஒருவருக்கு அவருடைய சீனி கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கின்ற போதே சிறுநீரகங்கள் பாதிப்படைய வாய்ப்பு இருக்கின்றது. இப்போது அவர் மெற்போர்மின் பாவித்ததனால்தான் தனது சிறுநீரகம் பாதிப்படைந்தது என்று நினைத்துக்கொள்வார்.
மெற்போர்மின் குளிசையினால் சிறுநீரகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது ஆனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மெற்போர்மின் மாத்திரை வழங்கமுடியாது. ஏனெனில் உடலில் உள்ளெடுக்கப்படும் மெடற்போர்மின சிறுநீரகத்தினாலேயே வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படாவிட்டால் உடலில் மெற்போர்மின் அளவு அதிகரித்து அதனுடைய பக்க விளைவுகள் அதிகரிக்கும்.
அவருக்கு இப்போது நீரிழிவு நோயின் இன்னொரு ஆபத்தான கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது இவ்வாறு தொடர்ச்சியாக சென்றால் சிறு நீரக செயலிழப்போடு ஏனைய பாதிப்புகளும் வந்து சேரும்.
நீரிழிவு மாத்திரைகளை வைத்தியர்கள் பரிந்துரைக்கும் அளவில் எடுத்து நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வோம்.
Dr. MIM Mujahir
MO PCU/OPD
AMH Kalmunai