27/02/2026
நாம் நோன்பின் சோர்வை சாதாரணம் என ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா?
பசி,சோர்வு, தலைவலி, நெஞ்செரிச்சல், செமிக்காத உணர்வு, வயிறு ஊதுதல் போன்றன நோன்பின் போது சாதாரணம் தானே என்று நினைத்து கடந்து விடுகின்றோம். எனினும் சரியான சஹர் நேர உணவுகளை தெரிவு செய்வதன் மூலம் இவற்றை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?. 12 - 14 மணித்தியாலங்கள் நோன்பு நோற்கும் போது, சஹர் நேர உணவுகள் நீண்ட நேரத்திற்கு நிலைத்து நின்று உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியதாக தெரிவு செய்தால் நாம் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளை பெரும்பாலும் குறைத்துக் கொள்ளலாம்.
எமது கடந்த பதிவினைத் தொடர்ந்து பலரும் தமது மனதில் இருந்த ஷுஹூர் உணவு சம்பந்தமான சந்தேகங்களை வினவி இருந்தனர். அவற்றில் இரண்டை கீழே குறிப்பிடுகிறேன்.
"அஸ்ஸலாமு அலைக்கும், நான் சஹர் சாப்பாட்டிற்கு ஒரு வாழைப்பழம், சிறிதளவு தயிர் அத்தோடு பால்மா கலந்த டீ ஒன்றையும் குடிக்கிறேன். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுமா?... சோறு சாப்பிடும் போது வயிறும் உடம்பும் பாரமாகவும் அசதியாகவும் இருக்கிறது"
"நான் ஷஹர் வேளைக்கு சோற்றுடன் வாழைப்பழத்தை கரைத்துத் தான் சாப்பிடுற, சில வேளை தேங்காய்ப்பாலுடன் கரைத்தும் சாப்பிடுற...இது சரியா?"
இந்த இரண்டு ஷஹர் நேர உணவு முறைகளும் சரியானதா? உடலுக்கு தீங்கு தருமா? என்று கேட்டால் இல்லை, அவை தவறில்லை. ஆனால் நீண்ட நேர நோன்பினைக் கடக்க இவை முழுமையான மற்றும் சரியான உணவுத் தெரிவாக அமையுமா? என்று கேட்டால் "இல்லை, இது பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறு அமையாது என்பதே பதில்.
இந்த இரண்டு உணவுப் பழக்கங்களையும் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். இந்த உணவுகளில் அடங்கியுள்ள சக்தி, ஒன்றில் - பெரும்பாலான வளர்ந்தவர்களுக்கு போதுமானதாக இருக்காது அல்லது நீண்ட நோன்பு நேரத்தை சமாளிக்கும் வகையில் தொடர்ச்சியாக வழங்கப்படாது. எனினும் நீங்கள் ஒல்லியானவராக, உயரம் குறைந்தவராக வேலை எதுவும் செய்யாது வீட்டில் இருப்பவராக இருந்தால் சில வேளை போதுமானதாக அமையலாம்.
மிகப் பெரிய பிரச்சினை எதுவென்றால் இவ்வுணவுகளில் தேவைக்கு மிகவும் குறைவாக புரதமும் நார்ப் பொருளும் காணப்படுவதாகும். சஹர் தொடங்கி இப்தார் வரையும் எமது உடலுக்கு சீராக சக்தி கிடைப்பதற்கு நார்ப்பொருள் பெரிதும் உதவி செய்வதோடு நன்கு சாப்பிட்ட திருப்தியை மேலதிக புரதங்கள் தரும். எனவே தான் இவற்றை சஹர் நேரத்திற்கான சமநிலையான உணவுத் தெரிவுகளாக கருத முடியாது.
சரி.... சோறு சாப்பிடுவதால் உடல் ஏன் பாரமாக தோன்றுகின்றது?... சோறு ஹெவி என்று அனேகம் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் உண்மை இருக்கிறதா? எப்போது உடல் பாரமாகத் தோன்ற வாய்ப்புள்ளது?
- நாம் அளவுக்கதிகமாக சாப்பிடும் போது.... சோறு மட்டுமல்ல, அளவுக்கதிமாக எதை எடுத்தாலும் அது ஹெவி தான்
- தேங்காய்ப்பால், எண்ணெய் அதிகம் கொண்ட கறியை/ பொரியலை சோற்றுடன் சேர்த்துக் கொள்ளுதல்
- சாப்பிட்ட உடனே தூங்குதல், அவசர அவசரமாக சாப்பிடுதல்
மேலே குறிப்பிட்ட காரணங்களால் சோறு சாப்பிட்ட பின் உடல் பாரமாகத் தோன்ற வாய்ப்புள்ளது. இக்காரணங்களை சரி செய்துவிட்டால் பெரும்பாலும் இந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவந்து விடலாம்.
சரி என்னத்த தான் ஷஹருக்கு சாப்பிட வேண்டும்?.. நாம் இலங்கையர்கள், நமது பிரதான உணவு சோறு. சோறு, அரிசிமா அடங்கிய இடியப்பம், பிட்டு, தோசை ஆகியவற்றை அளவோடு தெரிவு செய்து, மரக்கறி சேர்த்து சாப்பிடுங்கள்,மரக்கறியை அதிகரிப்பதே சிறந்தது. புரத உணவுகளை (மச்சம்) வழமையை விட சிறிது அதிகரிப்பது போதுமான புரதத்தை பெற்றுக் கொள்வதற்கும், நன்கு சாப்பிட்ட திருப்தியைப் பெற்றுக் கொள்ளவும் உதவும்.
நீங்கள் பால் தேனீர், யோகட், தயிர் எடுப்பவராக இருந்தால் அவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். மறக்காது அதிக திரவத்தை அருந்துங்கள்.
இல்லை.... என்னால் இவ்வாறு சாப்பிட முடியாது என்று சொன்னால்... புரதத்தை அதிகரிக்க முட்டை or ஏனைய மாமிசங்கள் or கச்சான்/முந்திரி/பாதாம் போன்ற வித்துக்களை சேர்க்கலாம். நார்ப் பொருட்களை அதிகரிக்க மரக்கறிகளை சேர்ப்பதே சிறந்தது. ஷஹருக்கு மரக்கறி சாப்பிட முடியாது என்று சொன்னால், நிச்சயமாக முடியும் முயற்சி செய்யுங்கள் என்பேன்.
நாம் மாறினால் தான் நமது பிள்ளைகளும் மாறிக் கொள்வார்கள்.
நீங்கள் சஹர் வேளையில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை comment இல் சொல்லுங்கள். பிரயோசனமாக இருந்தால் ஒரு Share செய்து விடுங்கள். ஒரு Share பலரைச் சென்றடையவும், பலர் பயனடையவும் உதவும்
M.S. Shamil Fowzath
Clinical Nutritionist