04/02/2026
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள்
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக சிரமதான நிகழ்வு, மர மற்றும் மூலிகைச் செடிகள் நடுகை, தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஆகியவை மருந்தக வளாகத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றன.
மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ. நளீம்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மருந்தகத்தின் ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது பங்களிப்புகளை வழங்கினர்.
மேலும், வைத்தியசாலையில் காணப்படும் மூலிகைகளை முறையாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் இந்நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது.
மூலிகைச் செடிகளின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் சுத்தப்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசத்தின் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையிலும், எதிர்கால தலைமுறைகளுக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கிலும் இந்நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். .