03/03/2021
AstraZeneca தடுப்பூசி மூலம் கொரோனா வைரஸ் உடலினுள் உட்செலுத்தப்படுகின்றதா?.
எளிய பதில் இல்லை என்பதாகும்!
இங்கு நடை பெறுவது, வைரஸ் எதிர்காலத்தில் உடலில் நுழைந்தால் அதை எளிதில் அடையாளங்கண்டறிந்து அழிக்கும் நோயெதிர்ப்புக் கட்டமைப்பின் திறனை மேம்படுத்துவதாகும்.
COVID19 வைரஸைக் கண்டறிய மிகச் சிறந்த வழி, வைரஸின் மேற்பரப்பிலுள்ள அதற்கே உரித்தான புரதத்தின் பகுதியினை (spike protein) பயன்படுத்துவதாகும்.
இத்தடுப்பூசியில் அடங்கியிருப்பது ChAdOx1 எனப்படும் வைரஸ் மூலக்கூறாகும். இது மனிதர்களில் எவ்வித நோய்த் தன்மையையும் ஏற்படுத்தாது என்பதுடன், இங்கு அடங்கியுள்ள DNAயின் குறித்த பகுதி மூலம் வழங்கப்படும் சமிக்கைக்கு ஏற்ப கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய குறித்த புரதத்தின் ஒரு பகுதி நம் உடலினுள் உருவாகிறது. அத்துடன் அதே நேரத்தில், நமது நோயெதிர்ப்புக் கட்டமைப்பு இந்த spike protein கூறுகளை அடையாளம் காணவும் அழிக்கவும் தொடங்குகிறது.
புரதக் கூறுகளின் இத் தடுப்பு நடவடிக்கையானது, spike protein ற்கு எதிராக எமது நோயெதிர்ப்புக் கட்டமைப்பினால் புதிதாக உருவாக்கப்பட்ட விசேட பிறபொருளெதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
இது முறையாக இடம்பெற 2-3 வாரங்களாவது செல்லும். இதற்காக, தடுப்பூசியினை இரண்டாவது முறையாகவும் உட்செலுத்திய பின்னர், இச்செயல்முறை மீளவும் செயல்படுத்தப்பட்டு எமது உடலில் அதிகளவில் பிறபொருளெதிரிகள் உருவாக்கப்படுகின்றன. இது உடலில் கொரோனா வைரஸிற்கு எதிராக ஆயுதக் களஞ்சியத்தை அமைப்பது போன்றதாகும்.
எளிமையாகச் சொல்வதானால், இந்த செயல்முறை நம் உடலின் நோயெதிர்ப்புக் கட்டமைப்புக்கும் வைரசிற்கு சமமான பிறபொருள் ஒன்றிற்கும் இடையிலான ஒரு சிறிய போரின் வடிவத்தை ஒத்தது.
தடுப்பூசி உட்செலுத்தலுக்குப் பிறகு நம்மில் பலர் கேள்விப்பட்ட சிறிய பக்க விளைவுகளுக்கும் இதுவே காரணமாகும். எனவே, உங்கள் உடலில் பிறபொருளெதிரியை உருவாக்கும் செயல்முறையை நீங்கள் ஒரு கெட்ட காரியமாக கருதாமல், நோயெதிர்ப்புச் செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாக அதை அறிந்து கொள்வது மிக முக்கியமாகும்.
இவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொண்ட ஒருவருக்கு வருங்காலத்தில் ஒருபோது கொரோனா வைரசு உடலினுள் செல்லுமாயின், வைரசிற்கு எதிரான பிறபொருளெதிரி எம் உடலில் காணப்படுவதனால், இப்பிறபொருளெதிரிகளினால்
கொரோனா வைரசின் வெளிப் புறமாக காணப்படும் spike புரதத்தை மிக விரைவாக இனங்கண்டு முழு வைரசையும் விரைவாகவும் இலகுவாகவும் அழித்துவிடும்.
நீங்கள் பெற்ற இவ்வறிவை ஏனையோருடனும் பகிர்ந்து கொவிற் தொற்றுநோய் எமது நாட்டிலிருந்து இல்லாமல் ஆக்கும் செயற்பாட்டின் பங்காளராகுங்கள்...